Monday, April 28, 2008

மேடைப் பேச்சு

நீண்ட நாட்களுக்கு முன், "நீங்களும் மேடைப் பேச்சாளர் ஆகலாம்" என்ற புத்தகம் படித்தேன். அதில் எழுதப்பட்டிருந்த ஒரு விஷயம் மிகவும் பிடித்திருந்தது. அதாவது, ஒரு மேடையில் பேசும் போது அந்த அரங்கத்தைப் பற்றியோ, அதற்கு முன் நடந்த சில நிகழ்வுகளைப் பற்றியோ பேசி ஆரம்பித்தால் அந்த விழாவுடன் ஒன்றி போன ஒரு உணர்வு கிடைக்கும் என்று எழுதி இருந்தது. நான் கவனித்த/கேள்விப்பட்ட சில மேடைப் பேச்சுகளில் இந்த விஷயம் எந்த அளவுக்கு ஒற்றுப் போய் இருக்கிறது என்பதைப் பற்றி கூற விரும்புகிறேன்.

பேரறிஞர் அண்ணா அவர்கள், சித்திரை மாதத்தில் இரவு 10.30 மணிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்றிருக்கிறார். அப்போது திரளான மக்கள் கூட்டம், அண்ணாவின் பேச்சைக் கேட்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நேர தாமதம் ஆகிவிட்ட சூழ் நிலையில், மிகவும் சுருக்கமாக பேச வேண்டும். அதே நேரத்தில் மக்கள் ரசிக்கும்படியாகவும் பேச வேண்டும். அண்ணா அவர்கள் பேசியது நான்கே வரிகள் தான். அவை

"மாதமோ சித்திரை
மணியோ பத்த்ரை(10.30)
உங்களுக்கோ நித்திரை
மறவாமல் உதயசூரியனுக்கே உங்கள் முத்திரை"

எவ்வளவு சுருக்குமாகவும் எவ்வளவு நிறைவாகவும் பேசி இருக்கிறார்.

வைரமுத்து அவர்கள் என் கல்லூரிக்கு வந்து இருந்த பொழுது அவரின் ஆரம்பப் பேச்சும், அவர் பேச ஆரம்பிக்கும் முன் நடந்த நிகழ்வுகளை எவ்வாறு பிரதிபலித்தன என்பதைப் பற்றிப் பார்ப்போம். நான் படித்தது ஒரு இசுலாமியக் கல்லூரி. பொதுவாக, இசுலாமிய இறை வாழ்த்து படிக்க பெறும் பொழுது அமைதியாக இருப்போமே தவிர எழுந்து நிற்பது வழக்கம் அல்ல.ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் பொழுது எழுந்து நிற்பது நாம் அனைவரும் கடைபிடிப்பது தான்.

இதை கவனித்த வைரமுத்து அவர்கள்,
"இங்கே முதலில் இறை வாழ்த்து பாடப்பட்டது. யாரும் எழு ந்து நிற்க வில்லை. பின்னர், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது...." என்று சொல்லி முடிக்கக் கூடவில்லை. கைத்தட்டல்கள் மீதமுள்ள வார்த்தைகளை பூர்த்தி செய்தன.

எங்கள் கல்லூரி அரங்கில் பொதுவாக ஆண்கள் வலது பக்கமும் பெண்கள் இடது புறமும் உட்கார வேண்டும் என்பது விதிமுறை.

இதை கவனித்த வைரமுத்து அவர்கள், ஆண்களை நோக்கி சொன்னார்.. "உங்கள் அரங் கமும் உங்களைப் போலத் தான். நீங்களும்(ஆண்களை சுட்டி காட்டி) இவர்களை(பெண்களை காட்டி) உங்களின் இடது புறம் தான் வைத்து இருக்கிறீர்கள்.. (இதயம் இடது புறம் தானே இருக்கிறது :) ).. உங்கள் அரங்கமும் இவர்களை இடது புறம் தான் வைத்து இருக்கிறது" என்றார்... கைத்தட்டல்களைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை :)

ஒரு முறை, வைரமுத்து அவர்கள் ஒரு கல்லூரிக்கு சென்று இருந்தார். அந்த கல்லூரியின் நிர்வாகி ஒருவர் , வைரமுத்து அவர்கள் பேசுவதற்கு முன், "இங்கே சிறப்பு விரு ந்தினராக வ ந்து இருக்கும் வைரமுத்து அவர்கள் மிகவும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர்.. தயவு செய்து இவர் பேசும் போது விசில் அடிப்பது போன்ற செயல்களை செய்து கல்லூரிக்கு அவப்பெயர் ஏற்படுத்தாத வண்ணம் நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று தன்து பேச்சை முடித்தார்.

அடுத்ததாக பேச வைரமுத்து அவர்கள் வந்த பொழுது.. "குயில்களுக்கு அழகே கூவுவது தான். அவைகளை கூவ வேண்டாம் என்று சொன்னால் எப்படி?.. எங்கே குயில்களே .. கொஞ்சம் கூவுங்கள் பார்ப்போம்" என்றார். விசில் சத்தம் விண்ணைக் கிழிக்கும் அளவுக்கு இருந்ததாம்.


இதே போல்,கலைஞர் அவர்கள், சமீபத்திய 2007-ம் ஆண்டு சட்டசபை பிரசாரத்தின் போது வேலூர் கோட்டையில் பேசும் போது கால தாமதம் காரணமாக சீக்கிரம் பேசி முடிக்க வேண்டிய நிலையில் ஒரே ஒரு வரியில் பேசி முடித்தார் " இன்று மே 2-ம் தேதி.. வேலூர் கோட்டையில் இருக்கிறோம்.. மே 8-ம் தேதி சென்னை கோட்டையில் ஆட்சி பொறுப்புடன் ச ந்திப்போம்" என்று.




Whats Your Google PageRank?

No comments:

Post a Comment