Wednesday, June 25, 2014

வைரமுத்து - Link-உம் தலைப்பிரசவமும்



சமீபத்தில் படித்த செய்தித்  தலைப்பு :

யுவன் சங்கர் ராஜாவும் வைரமுத்துவும் ஒரு படத்திற்காக இணைகிறார்கள் !

இது தொடர்பாக வைரமுத்து அவர்களிடம் கேட்கப் பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்.

இந்த வாய்ப்பு அமைந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது சாத்தியம் ஆனதற்கு  திரு. சீனு.ராமசாமி அவர்களும் திரு.லிங்குஸ்வாமி அவர்களும் தான் காரணம். மனிதர்களால் முடியாததை இந்த இரு "சாமி"கள்  செய்துள்ளார்கள். இது போன்ற நல்ல இணைப்புகளை உருவாக்குவார் என்று முன் கூட்டியே அறிந்து தான் லிங்குஸ்வாமி அவர்களின் பெற்றோர் அவருக்கு "Link"-உ-ஸ்வாமி என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். :)
------------------------------------------------------------------------------------------

 வைரமுத்து  அவர்கள், ஒரு அரசு அலுவலகத்தில் பணி புரிந்த சமயம்.

பாரதிராஜா அவர்களின் அலுவலகத்தில் இருந்து ஒரு படத்திற்கு பாடல் எழுதும் வாய்ப்புக்காக ஒரு அழைப்பு வருகிறது. அது தான் வைரமுத்து அவர்களக்கு வந்த முதல் திரைப்பட வாய்ப்பு. உடனே புறப்பட தயார் ஆகிறார்.

மறு கணமே,  வைரமுத்துவின் துணைவியார் பிரசவ வலி கொண்டு பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக இன்னொரு அழைப்பு வருகிறது.

மிகவும் எதிர்பார்த்த திரைப்பட வாய்ப்பு ஒரு புறம். மறுபுறம் - மனைவியின் முதல் பிரசவம். என்ன செய்வது என்று அறியாமல் இருந்தவரிடம் நண்பர் ஒருவர், தான் மருத்தவமனை சென்று பார்த்து கொள்வதாக சொல்லி வைரமுத்துவை பாரதிராஜாவிடம் போகச்  சொன்னார்.

இசைஞானி இளையராஜா மெட்டு அமைக்க உருவாகிறது அந்த வரிகள் -

"பொன் மாலைப் பொழுது... இது ஒரு பொன் மாலைப் பொழுது"

"பூமரங்கள்- சாமரங்கள் வீசாதோ??" என்ற வரிக்கு பாரதிராஜாவின் புருவங்கள் உயர்ந்தனவாம். இளையராஜா வரிகளைப் படித்து விட்டு மிகவும் பாராட்டி  - "இவரின் தொலைபேசி எண்ணை பத்திரமாக குறித்து வைத்து கொள்ளுங்கள்"
என்று சொல்லி விட்டு சென்றாராம்.

பாரதிராஜா மீண்டும் மீண்டும் அந்த வரிகளைப் படித்து "Excellent! Excellent!" என்று சொல்லி முன் பணம் தந்து அனுப்பி உள்ளார்.

மிகுந்த மகிழ்ச்சியுடன் மருத்தவமனை செல்கிறார். அங்கேயும் நற்செய்தி - "ஆண் குழந்தை பிறந்து உள்ளது".

பொன்மணி வைரமுத்து அவர்களின் கைகளைப் பற்றி சொல்கிறார்
- உன் பெயரின் முதல் பாதி(பொன்) தான் - திரைப்பட உலகில் என் ஆதி (பொன்மாலை). அது மட்டும் அல்ல பொன்மணி, யாருக்கும் இல்லாத பாக்கியம் - உனக்கும் எனக்கும் ஒரே  நாளில் தலைப் பிரசவம்."