Saturday, August 31, 2024

மேன்மை எனப்படுவது யாதெனின்

நண்பர் ஒருவர், சில்லறை வர்த்தகம் செய்து வந்தார். பொருள்கள் மொத்தமாக வாங்குவதால் அட்டைப் பெட்டிகள் சற்று அளவுக்கு அதிகமாகவே அவர் அலுவலகத்தில் இருக்கும். வாரா வாரம், அதன் இருப்பும் அதிகரித்துக் கொண்டே வந்தது. அதை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறி வந்தார்.

ஒரு நாள், மாலை வேளை,  தி.நகரில் அவருடன் தேநீர் அருந்தும் பொழுது நன்கு வயது முதிர்ந்த(60 வயதிற்கு மேல் ) ஒரு கணவன் மனைவி , பழைய தாள்கள் , அட்டைப்பெட்டிகள் எல்லாம் தள்ளு வண்டி போல் ஒன்றை வைத்து இழுத்துச்  செல்வதைக் கண்டார். அங்கிருந்து எதிர் புறம் கை  அசைத்து அவரை அழைத்தார்.

அவர் வந்த பின் 'அலுவலகத்தில் நிறைய அட்டைப்பெட்டிகள் உள்ளன. எடுத்துக் கொள்கிறீர்களா?' என்று கேட்டார். அவர் மற்றும் அவரது துணைவியார் அலுவலகம் வந்து அனைத்து அட்டைப்பெட்டிகளையும்  நேர்த்தியாக மூட்டை கட்டி எடுத்துக் கொண்டு எடை போட்டு நண்பரிடம் கணக்கு கூறி பணத்தைத் தந்தனர். நண்பர் 'வேண்டாம், நான் அதை வைத்து ஏதும் செய்யப் போவது இல்லை.வைத்துக் கொள்ளுங்கள்.  இந்த வயதில் நீங்கள் பணி செய்வதே பெரிது.' என்றார். 

அந்த முதியவர் ' முடியவே முடியாது. வாங்கிக்கோங்க. நான் ஒரு விலை வச்சி தான் விக்கிறோம்' என்றார். அவரது  மனைவியும் 'வாங்கிக்கோங்க தம்பி. சும்மா எல்லாம் தரக் கூடாது. வழக்கமா  இந்த மாதிரி குடுத்தா மட்டும் போதும்' என்று கூறினார். நண்பர் அவர் தந்த பணத்தை மறுத்து விட்டார்.

'அப்பப்போ வந்து எடுத்துக்கோங்க. எதுவும் வேண்டாம். எனக்கு இந்த இடம் சுத்தமா இருக்கணும். நீங்க எடுத்துட்டு போறதே எனக்கு உதவி தான்.' என்று கூறினார். நன்றி கூறி இருவரும் சென்று விட்டனர். அவ்வப்பொழுது வந்து அட்டைப்பெட்டிகள் எடுத்துச் செல்வர். ஒவ்வொரு முறையும் பணம் தர முற்படுவர். நண்பர் மறுப்பார்.

2015 -ஆம் ஆண்டு. சென்னையில் வெள்ளம் பெருக்கெடுத்தது. 

சில நாள்கள் அலுவலகத்திற்கு செல்லும் வழி யாவும் அடைக்கப்பட்டன. நிறைய வீடுகள், கடைகளுக்குள் எல்லாம் தண்ணீர் புகுந்து இருந்தது. நானும் நண்பரும், எல்லாம் அடங்கிய பின் அலுலகக் கதவை திறக்கிறோம்.  கழிவு நீருடன் மழை நீரும் கலந்து அலுவலகம் - சகதிக் கோலம். புதிதாக வாங்கப்பட்ட நிறைய இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் சகதி நீரில் மிதக்கின்றன. 

யார் யாரையோ அழைக்கிறோம். சரியான ஆள்களும் இயந்திரங்களும் ஆங்காங்கே செயல்பட்டு கொண்டு உள்ளன.  நீர் உறிஞ்சி இயந்திரம் மூலம் , சகதி நீர் கழிவு நீர் கால்வாயில் கலந்து விட்டு ஆயிற்று. சுத்தம் செய்ய நானும் நண்பரும் கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு முதலில் சேதம் அடைந்த பொருள்களை வெளியில் போடுவோம் என்று எடுத்து வைக்கிறோம். 

மணி மதியம் 2 இருக்கும். நிறைய பணிகள் உள்ளன. அந்நேரம், பின்னால்  வந்து அந்த அட்டைப்பெட்டி முதியவர் நிற்கிறார். 'ரொம்ப சேதம் ஆயிடுச்சுங்களா ?' என்கிறார்.

'ஆமாம்' என்று என் நண்பர் தலை அசைத்துக் கொண்டு இருக்கையில் எதுவுமே கேட்காமல்  பெரிய நெகிழிப்பையை அவர் மனைவி  வெளியே சென்று எடுத்துக் கொண்டு வந்து வைத்தார். 

தடதட வென எதை எல்லாம் வீசி விடலாம் எனக் கேட்டு இருவரும் மூட்டை கட் டி மூன்று முறை எடுத்து சென்று குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு வந்தனர். 'நாங்களே பார்த்துக் கொள்கிறோம், உங்களுக்கு எதுக்கு சிரமம்'  என்று கூறியதைக் காதில் அவர்கள் இருவரும் போட்டுக் கொள்ளவே இல்லை. 

அவர்கள் செய்த சில பணிகளைக் எழுத்தால் கூட பதிவு செய்ய இயலாது. சிறிதும் தயக்கம் இன்றி அந்த அளவு சகிப்புத் தன்மையுடன் அனைத்தையும் சுத்தம் செய்தனர். நண்பர் என்ன சொல்வது என்றே தெரியாமல் நின்று கொண்டு இருந்தார். இயன்ற வரை நானும் என் நண்பரும் நகர்த்தி, எடுத்து வைத்து சுத்தப் படுத்தினாலும் அவர்கள் செய்யும் அளவு செய்ய இயலவில்லை.  நல்லவேளையாக அந்த இடத்தின் உரிமையாளர் 2 பேர் முழுமையாக சுத்தம் செய்ய உள்ளனர் என்று கூறி அனுப்பி வைத்தார். உடனே, 'ஆளுங்க வர்றாங்க. போதுங்க. நீங்க இவ்ளோ செஞ்சதே பெரிய உதவி. மிக்க நன்றி' என்று நண்பர் அவர்களை இடைமறித்தார்.  நீரை ஒரு வாளியில் கொண்டு வந்து ஊற்றி விட்டு, கிட்டத்தட்ட அனைத்தையும் முடித்து விட்டனர்.

மாலை 5.30 மணி இருக்கும். எல்லாம் ஓரளவு சுத்தம் ஆனது. அவர்கள் கிளம்பினர் . நண்பர் அவர்களுக்கு  பணம் தந்தார். 'நாங்க குடுத்த அப்போ நீங்க வாங்கல ல. இப்போ நாங்க வாங்க மாட்டோம்.' என்று உறுதியாக இருவரும் மறுத்தனர். கண்டிப்பா அது வெறும் வாய் சொல்லாகத் தெரியவில்லை. 

'எவ்ளோ வேலை செஞ்சி இருக்கீங்க. உங்களோட வழக்கமான வேலை இன்னிக்கு கெட்டுச்சு. கிட்டத்தட்ட 3.30 மணி நேரம் இந்த வயசுல..தயவு செஞ்சி வச்சிக்கோங்க' என்று திணித்த போதும் இருவரும் வேகமாக கிளம்ப ஆரம்பித்தனர்.

'நான் எனக்கு உதவாத அட்டைப்பெட்டியைத் தான் தந்தேன். வேற எதுவுமே செய்யல. இப்படி பண்ணாதீங்க. தயவு செய்து வாங்கிக்கோங்க' என்று கூறியதைத் தவிர்த்து சென்றனர்.

'நீங்க போயி தொழிலை பாருங்க. இந்த இழப்ப எல்லாம் சீக்கிரம் சரி கட்டிடுவீங்க. கவலைப்படாதீங்க' என்று கூறி அந்த அம்மா சென்றார். 

வீதியை அவர்கள் இருவரும் கடக்கும் வரை நண்பர் அவர்களை பார்த்து கொண்டே இருந்தார்.

எங்கோ படித்தது 'பல மேன்மையான செயல்களை,  சில எளிய மனிதர்கள் மிகச்சாதாரணமாக , கிட்டத்தட்ட அலட்சியமாக வெளிப்படுத்தி விட்டுச் செல்வர்'. 


11 comments: