Saturday, August 31, 2024

மேன்மை எனப்படுவது யாதெனின்

நண்பர் ஒருவர், சில்லறை வர்த்தகம் செய்து வந்தார். பொருள்கள் மொத்தமாக வாங்குவதால் அட்டைப் பெட்டிகள் சற்று அளவுக்கு அதிகமாகவே அவர் அலுவலகத்தில் இருக்கும். வாரா வாரம், அதன் இருப்பும் அதிகரித்துக் கொண்டே வந்தது. அதை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறி வந்தார்.

ஒரு நாள், மாலை வேளை,  தி.நகரில் அவருடன் தேநீர் அருந்தும் பொழுது நன்கு வயது முதிர்ந்த(60 வயதிற்கு மேல் ) ஒரு கணவன் மனைவி , பழைய தாள்கள் , அட்டைப்பெட்டிகள் எல்லாம் தள்ளு வண்டி போல் ஒன்றை வைத்து இழுத்துச்  செல்வதைக் கண்டார். அங்கிருந்து எதிர் புறம் கை  அசைத்து அவரை அழைத்தார்.

அவர் வந்த பின் 'அலுவலகத்தில் நிறைய அட்டைப்பெட்டிகள் உள்ளன. எடுத்துக் கொள்கிறீர்களா?' என்று கேட்டார். அவர் மற்றும் அவரது துணைவியார் அலுவலகம் வந்து அனைத்து அட்டைப்பெட்டிகளையும்  நேர்த்தியாக மூட்டை கட்டி எடுத்துக் கொண்டு எடை போட்டு நண்பரிடம் கணக்கு கூறி பணத்தைத் தந்தனர். நண்பர் 'வேண்டாம், நான் அதை வைத்து ஏதும் செய்யப் போவது இல்லை.வைத்துக் கொள்ளுங்கள்.  இந்த வயதில் நீங்கள் பணி செய்வதே பெரிது.' என்றார். 

அந்த முதியவர் ' முடியவே முடியாது. வாங்கிக்கோங்க. நான் ஒரு விலை வச்சி தான் விக்கிறோம்' என்றார். அவரது  மனைவியும் 'வாங்கிக்கோங்க தம்பி. சும்மா எல்லாம் தரக் கூடாது. வழக்கமா  இந்த மாதிரி குடுத்தா மட்டும் போதும்' என்று கூறினார். நண்பர் அவர் தந்த பணத்தை மறுத்து விட்டார்.

'அப்பப்போ வந்து எடுத்துக்கோங்க. எதுவும் வேண்டாம். எனக்கு இந்த இடம் சுத்தமா இருக்கணும். நீங்க எடுத்துட்டு போறதே எனக்கு உதவி தான்.' என்று கூறினார். நன்றி கூறி இருவரும் சென்று விட்டனர். அவ்வப்பொழுது வந்து அட்டைப்பெட்டிகள் எடுத்துச் செல்வர். ஒவ்வொரு முறையும் பணம் தர முற்படுவர். நண்பர் மறுப்பார்.

2015 -ஆம் ஆண்டு. சென்னையில் வெள்ளம் பெருக்கெடுத்தது. 

சில நாள்கள் அலுவலகத்திற்கு செல்லும் வழி யாவும் அடைக்கப்பட்டன. நிறைய வீடுகள், கடைகளுக்குள் எல்லாம் தண்ணீர் புகுந்து இருந்தது. நானும் நண்பரும், எல்லாம் அடங்கிய பின் அலுலகக் கதவை திறக்கிறோம்.  கழிவு நீருடன் மழை நீரும் கலந்து அலுவலகம் - சகதிக் கோலம். புதிதாக வாங்கப்பட்ட நிறைய இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் சகதி நீரில் மிதக்கின்றன. 

யார் யாரையோ அழைக்கிறோம். சரியான ஆள்களும் இயந்திரங்களும் ஆங்காங்கே செயல்பட்டு கொண்டு உள்ளன.  நீர் உறிஞ்சி இயந்திரம் மூலம் , சகதி நீர் கழிவு நீர் கால்வாயில் கலந்து விட்டு ஆயிற்று. சுத்தம் செய்ய நானும் நண்பரும் கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு முதலில் சேதம் அடைந்த பொருள்களை வெளியில் போடுவோம் என்று எடுத்து வைக்கிறோம். 

மணி மதியம் 2 இருக்கும். நிறைய பணிகள் உள்ளன. அந்நேரம், பின்னால்  வந்து அந்த அட்டைப்பெட்டி முதியவர் நிற்கிறார். 'ரொம்ப சேதம் ஆயிடுச்சுங்களா ?' என்கிறார்.

'ஆமாம்' என்று என் நண்பர் தலை அசைத்துக் கொண்டு இருக்கையில் எதுவுமே கேட்காமல்  பெரிய நெகிழிப்பையை அவர் மனைவி  வெளியே சென்று எடுத்துக் கொண்டு வந்து வைத்தார். 

தடதட வென எதை எல்லாம் வீசி விடலாம் எனக் கேட்டு இருவரும் மூட்டை கட் டி மூன்று முறை எடுத்து சென்று குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு வந்தனர். 'நாங்களே பார்த்துக் கொள்கிறோம், உங்களுக்கு எதுக்கு சிரமம்'  என்று கூறியதைக் காதில் அவர்கள் இருவரும் போட்டுக் கொள்ளவே இல்லை. 

அவர்கள் செய்த சில பணிகளைக் எழுத்தால் கூட பதிவு செய்ய இயலாது. சிறிதும் தயக்கம் இன்றி அந்த அளவு சகிப்புத் தன்மையுடன் அனைத்தையும் சுத்தம் செய்தனர். நண்பர் என்ன சொல்வது என்றே தெரியாமல் நின்று கொண்டு இருந்தார். இயன்ற வரை நானும் என் நண்பரும் நகர்த்தி, எடுத்து வைத்து சுத்தப் படுத்தினாலும் அவர்கள் செய்யும் அளவு செய்ய இயலவில்லை.  நல்லவேளையாக அந்த இடத்தின் உரிமையாளர் 2 பேர் முழுமையாக சுத்தம் செய்ய உள்ளனர் என்று கூறி அனுப்பி வைத்தார். உடனே, 'ஆளுங்க வர்றாங்க. போதுங்க. நீங்க இவ்ளோ செஞ்சதே பெரிய உதவி. மிக்க நன்றி' என்று நண்பர் அவர்களை இடைமறித்தார்.  நீரை ஒரு வாளியில் கொண்டு வந்து ஊற்றி விட்டு, கிட்டத்தட்ட அனைத்தையும் முடித்து விட்டனர்.

மாலை 5.30 மணி இருக்கும். எல்லாம் ஓரளவு சுத்தம் ஆனது. அவர்கள் கிளம்பினர் . நண்பர் அவர்களுக்கு  பணம் தந்தார். 'நாங்க குடுத்த அப்போ நீங்க வாங்கல ல. இப்போ நாங்க வாங்க மாட்டோம்.' என்று உறுதியாக இருவரும் மறுத்தனர். கண்டிப்பா அது வெறும் வாய் சொல்லாகத் தெரியவில்லை. 

'எவ்ளோ வேலை செஞ்சி இருக்கீங்க. உங்களோட வழக்கமான வேலை இன்னிக்கு கெட்டுச்சு. கிட்டத்தட்ட 3.30 மணி நேரம் இந்த வயசுல..தயவு செஞ்சி வச்சிக்கோங்க' என்று திணித்த போதும் இருவரும் வேகமாக கிளம்ப ஆரம்பித்தனர்.

'நான் எனக்கு உதவாத அட்டைப்பெட்டியைத் தான் தந்தேன். வேற எதுவுமே செய்யல. இப்படி பண்ணாதீங்க. தயவு செய்து வாங்கிக்கோங்க' என்று கூறியதைத் தவிர்த்து சென்றனர்.

'நீங்க போயி தொழிலை பாருங்க. இந்த இழப்ப எல்லாம் சீக்கிரம் சரி கட்டிடுவீங்க. கவலைப்படாதீங்க' என்று கூறி அந்த அம்மா சென்றார். 

வீதியை அவர்கள் இருவரும் கடக்கும் வரை நண்பர் அவர்களை பார்த்து கொண்டே இருந்தார்.

எங்கோ படித்தது 'பல மேன்மையான செயல்களை,  சில எளிய மனிதர்கள் மிகச்சாதாரணமாக , கிட்டத்தட்ட அலட்சியமாக வெளிப்படுத்தி விட்டுச் செல்வர்'. 


Wednesday, November 4, 2020

I know swimming da

ஓர் ஏரியின் கரை அருகில் நின்று கொண்டு  இருக்கிறேன். பேச்சு வாக்கில் என் அருகில் பேசிக் கொண்டு இருந்தவர், வேகமாக ஏரியில் விளையாட்டாக என்னைத் தள்ளி விடுகிறார்.  நீரில் மூழ்குகிறேன்.

"என்ன மாமா இப்படி ஆகி விட்டது?. சரி பத்திரமாக செல்லுங்கள்" என்று மகிழ்வுடன் கை அசைத்துவழி அனுப்புகையில் தான் முகம் பார்க்கிறேன். அவர் என் அக்காவின் மூத்த மகன்.

மெய் போன்ற அந்த கனவில் இருந்து விழிக்கிறேன். நேரம் பார்க்கிறேன். காலை 5 மணி. இந்த கனவு  நடப்பதற்கு சாத்தியங்கள் அதிகம் என்பதை உணர்ந்தேன். 

2 காரணங்கள்

1. எனக்கு நீச்சல் தெரியாது(அன்று)

2. இதை செய்யும் முழு ஆற்றலும் திறமையும் பிறப்பிலேயே என் அக்கா மகனுக்கு உண்டு என்ற அசாத்திய நம்பிக்கை.

உடனே இணையத்தில் தேடி, 6 மணிக்கு, அருகில் உள்ள நீச்சல் பயிற்சி நிலையம் சென்று சேர்ந்து விட்டேன்.

15 நாள்கள் பயிற்சியில்  ஓரளவு நீந்தக் கற்றுக் கொண்டு ஆயிற்று. ஆனால் ஒரே ஐயம்- அந்த நீச்சல் குலத்தின் ஆழம் 5 1/2 அடி மட்டுமே. அதனால் முழு நம்பிக்கை வரவில்லை.  அந்த பயிற்சியாளரிடம் கேட்ட பொழுது - "நீங்க நீந்துவதைத் தான் பார்க்கிறேனே. அருமையாக நீந்துகிறீர்கள். நீங்க எல்லாம் கடலிலேயே நீந்தலாம். அந்த அளவுக்கு தயாராகி விட்டீர்கள். ஊரில் கிணற்றில் எல்லாம் குதித்து பாருங்கள். சுலபமாக இருக்கும்" என்றார்.



^இதைப் போன்று என்னை நானே தோளில் தட்டிக் கொண்டு வந்து விட்டேன்.

சில ஆண்டுகளுக்கு முன், நண்பர் கார்த்தி நீச்சல் கற்றுக் கொண்ட பிறகு, ஏதேச்சையாக கடற்கரை செல்லலாம் என்று கூறி 

- "அந்த பெரிய அலை வருது பாரு. நீ அங்க விழுந்தா கூட உன்னை காப்பற்றி விடுவேன். ஏன்னா எனக்கு தான் இப்போ நீச்சல் தெரியுமே.. "

 " அங்க தெரியுது பாரு படகு. நீ அங்க விழுந்தா கூட உன்னை காப்பற்றி விடுவேன். ஏன்னா எனக்கு தான் இப்போ நீச்சல் தெரியுமே.. 


"சக்திமான், என்னைக் காப்பாற்று"- என்று குழந்தைகள் கத்தினால் சக்திமான் வந்து காப்பாற்றுவாறே அது போல -"நீச்சல் வீரர் கார்த்தி, என்னை காப்பாறுங்கள்" என்று கத்தினால் போதும் - உடனே வந்து காப்பாற்றி விடுவேன்.  " என்பது போல் எல்லாம் பேசி என்னை வெறுப்பேற்றி இருந்தார். 

அன்று முடிவு செய்தேன். நாம் நீச்சல் கற்றுக் கொண்டாலும் இது போல யாரையும் வெறுப்பேற்றக் கூடாது என்று.

சில நாள்கள் கழித்து, நண்பர் குபேந்திரன் ஊரான பெரியகுளம் சென்றேன்.

"கல்லாறு செல்வோம். அனால் ஆழம் அதிகம்.. கொஞ்சம் பார்த்து தான் இருக்க வேண்டும் என்று கூறினார்."

"Hey. I know swimming da" என்று கனவு கண்டது முதல் 5 1/2 அடி நீச்சல் குளத்தில் கற்றது வரை கூறிக் கொண்டே வந்தேன். 



அருமையான நீர் வீழ்ச்சி.  ஆழம் அதிகமாக இருந்தது. 

குபேந்திரன் : "முதலில் நான் குதித்து ஆழம் பார்த்து சொல்கிறேன். நீங்கள் பிறகு குதியுங்கள்" என்றார்

"Hey. I know swimming da" என்று கூறி குதித்தேன். ஆழம் கொஞ்சமா தான் இருக்கு. நீ குதி." என்று கூறி ஒரு பக்கமாக நீந்தி சென்றேன்.



நன்கு நீந்தி சென்று ஒரு பாறை  இருந்தது. அதன் மீது அமரலாம் என்று அப்பக்கம் நீந்தி சென்று அந்த பாறையைத் தொட்டால், அந்த பாறை முழுதும் பாசி படிந்து வழுக்கியது பிடிக்கவே இயலவில்லை .சற்று தூரத்தில் சில செடிகள் போல இருந்தன. அதைப் பிடிக்கலாம் என்று சென்றேன். அவை முட்செடிகள். "சத்திய சோதனை" என்று நினைத்துக் கொண்டேன்.

சரி திரும்ப வந்த இடத்திற்கே சென்று விடுவோம் என்று நீந்தி வருகிறேன். அதற்கு மேல் நீந்த முடியவில்லை. 

நான் இருந்த திசையின் எதிர் திசையில் குபேந்திரன் ஒரு பாறை மீது அமர்ந்து இருந்தார்.  "தம்பி, தம்பி" என்று தத்தளித்து கை அசைக்கிறேன்.

"சும்மா விளயாதீங்க. I know - You know swimming" என்கிறார். 

மேலே நான்கு பதின்ம வயதில் இருந்தவர்களில் ஒருவர் குதித்து என் அருகில் வந்தார்.

"அவர் சும்மா விளையாடறார். கிட்ட போனா அமுக்கிடுவார். போகாதே" என்று தடுக்கிறார் குபேந்திரன். 

"வாங்க ண்ணே .. கையப் பிடிங்க" என்று சொல்லி மீண்டும் அதே வழுக்குப் பாறை அருகில் அழைத்து செல்கிறார். 

'அந்த பக்கம் வேண்டாம்" என்று நான் சொல்ல வந்ததைக் கேட்காமல் "பயப்படாதீங்க.. நான் தான் இருக்கேன் ல" என்று  அதே வழுக்கு பாறையில் கை யைப் பிடிக்க முடியாமல் என்னை விட்டு விட்டு வேறொரு நபரை அழைத்தார். 

இன்னொருவர் நீந்தி வர கொஞ்சம் முழுக ஆரம்பித்து விட்டேன். அதற்குள் அந்த வேறு நபர் வந்து கையைப் பற்றி இழுத்து செல்கிறார்.

"உயிர் பிழைத்து விட்டோம்" என்று தெரிந்து உயிரைக் காப்பாற்றியவரின் முகத்தைப் பார்க்கலாம் என்று நீருக்குள்ளே இருந்து எட்டிப் பார்த்து மீண்டும் தலையை குனிந்து கொண்டேன். 

காரணம் - அந்த பையன் மேல் இருந்து குதிக்கும் பொழுது கட்டி இருந்த ஒரே துண்டும் காற்றில் பறந்து போய் விட்டது. தன் மானத்தையும் பொருட்படுத்தாமல் நம் உயிரைக் காப்பாற்றி உள்ளான் என்று எண்ணினாலும் தலை நிமிர முடியாத சூழல்.  

 பாறைக்கு அருகில் இழுத்து வந்து விட்டார். அமைதியாக பாறை மீது அமர்ந்தேன். "ஒன்னும் இல்லை ண்ணே.. காலை கொஞ்சம் மேல தூக்கி அடிச்சி இருந்தீங்கன்னா வந்துட்டு இருப்பீங்க" என்று "அப்படியே" எதிரில் நின்று கொண்டு பேசிக் கொண்டு இருந்தார். இன்னும் தலை நிமிர முடியாமல் தான் அமர்ந்து இருக்கிறேன். "நீந்தி வர முடியலைன்னு வருத்தப் பட்டு தலை குனிந்து அமர்ந்து இருக்கிறார் போல.." என்று அவர் நண்பர்களிடம் கூறினார். எதுவும் பேசாமல் அமர்ந்து இருந்தேன்.

"அந்த துண்டை தூக்கிப் போடுய்யா" என்று அப்படியே சாவகாசமாக நண்பர்களைக் கேட்டார். "அங்குட்டு வந்து வாங்கிக்கய்யா.. நல்லா காத்தோட்டாம வா.. இங்கனக்குள்ள யாரு இருக்கா?" என்று அதை விட சாவகாசமாக அவரது நண்பர்கள் நடந்து செல்ல, என் அருகில் நின்று கொண்டு - "வரேன்ண்ணே" என்றார். 

"நன்றி தம்பி" என்று  குனிந்து கொண்டே சொன்னேன்.

அருகில் அமர்ந்து இருந்த குபேந்திரன் - "நன்றியும் மன்னிப்பும் கண்ணைப் பார்த்து சொல்லணும் மாமா" என்று கண் சிமிட்டிக் கொண்டே.

முறைத்தேன்.


"புரியுது. உங்க திட்டம் புரிந்து விட்டது. ஆழம் குறைவா இருக்குன்னு வருத்தப் படுறீங்க... அப்படியே மேல நடந்து போனால் 50 அடி ஆழத்துல நீந்தலாம் யாரும் இருக்க மாட்டங்க- ஏன்னா - you know swimming ல?" என்றார்.

Friday, July 17, 2020

பெயர் சொல்லும் பிள்ளை

இப்பொழுது எல்லாம் விதம் விதமாக குழந்தைகளுக்கு பெயர் வைப்பதைப் பார்க்கிறோம்.

நான் கேட்ட, கேள்விப்பட்ட சில பெயர்களையும் அவற்றின் காரணங்களையும் எடுத்து உரைக்கிறேன்.

நன்றி மறவாமை:

நண்பரின் பெயர் மார்ஷல். ஏன் இந்த பெயர் என்றால் அவருடைய அப்பாவின் முதல் முதலாளியின் பெயர். இவருக்கு பொருள் உதவி எல்லாம் செய்து, வழிகாட்டி, கடன் தந்து முன்னேற்றம் அடைய உதவி உள்ளார். நல்லது.


இதற்கு இன்னொரு நண்பர் கேட்டார் - "நல்ல வேலை. உங்க அப்பா வங்கியிலோ / நிதி நிறுவனத்திலோ கடன் பெற்று உன்னை வளர்த்து இருந்தால், "கனரா வங்கி, வெங்கடாசலம் பைனான்சு கம்பனி என்று உனக்கு பெயர் வைத்து இருப்பாரோ" .


பொறாமை தவறு

நண்பரின் மகள் பெயர் பத்மஸ்ரீ. ஏன் இந்த பெயர் என்று கேட்டேன்.
"எல்லாம் இந்த கமல் மேல் இருக்கும் பொறமை தான்" என்றார். "எந்த கமல்?" என்றேன். "நடிகர் கமல் தான். எதற்கு எடுத்தாலும் பத்மஸ்ரீ கமல்ஹாசன், பத்மஸ்ரீ கமல்ஹாசன் என்று சொல்கிறார்கள். இப்பொழுது, பள்ளியில் என் மகளை "சஞ்சய் ராமசாமி " என்பது போல என் பெயரை சேர்த்தால் - "பத்மஸ்ரீ சண்முக சுந்தரம்" என்று அழைக்க வேண்டும். அப்படி அழைக்கப்படும் பொழுது நான் அந்த விருதைப் பெற்றது போலவே உணர்கிறேன் என்றார். "நான் உன்னிடம் பேசுவது சேது படம் இறுதிக் காட்சி பார்ப்பது போலவே உள்ளது" என்று கூறி விடை பெற்றேன்.


பிரேமம்

"எனக்கு ஏன் பா ஹரிணி-ன்னு பேர் வச்சீங்க"- என்று கண்ணீர் விட்டு கேட்ட "பாய்ஸ்" ஜெனிலியா நமக்கு பழக்கப்பட்டது தான்.
ஆனால் அதிலும் ஒரு புது முயற்சி. நண்பனின் மகன் பெயர் - "ஸ்ரீ செல்வ முத்து குமரன்".


2 காரணங்கள் சொன்னார்

1. சோதிடர்கள் கண்டிப்பாக 4 பெயர்களை வைக்க வேண்டும் என்று கூறி விட்டனராம்.

2. எல்லா பழைய காதலிகள் பெயரையும் இணைத்து வைத்த பெயர்.

பள்ளி - ஸ்ரீ திவ்யா
கல்லூரி(முதல் இரண்டு ஆண்டுகள்) - தமிழ்செல்வி
கல்லூரி(அடுத்த இரண்டு ஆண்டுகள்) - முத்தழகு
பணியிடம் - நிவேதா

"முதல் மூன்றும் சரி. நிவேதாவுக்கு பதில் ஏன் "குமரன்" என்று வைத்தாய்" என்று கேட்டேன்.

அந்த முதல் மூன்று பெண்களும் என்னை நிராகரித்து விட்டனர். நிவேதா என் காதலை ஏற்றுக் கொண்டார். ஆனால், அவர் தந்தை அதை மறுத்து விட்டார். அதன் காரணமாக தான் அவர் தந்தை பெயர் -"குமரன்". அதை சேர்த்துக் கொண்டேன். என் மகன் மீது கோபம் வரும் பொழுது எல்லாம் "குமரன்" என்று அழைத்து திட்டி மகிழ்வேன் என்றார்.  இன்னும் சில விடுபட்ட பெயர்களை அடுத்த குழந்தைக்கு வைக்க திட்டமிட்டு உள்ளார்.

தலைவா


தலைவர்கள் பெயரை சூட்டுதல்

தயவு செய்து இந்த பெயர்களைத் எக்காரணத்தைக் கொண்டும் தவிர்க்கவும்.
o   விவேகானந்தன்.
o   இந்திரா காந்தி  
o   ஜவஹர்லால் நேரு   
o   கட்டபொம்மன் ('மஜா' படத்திலேயே இதற்கான காரணம் தெளிவாக உண்டு)

   குழந்தைகள் தன் தவறுக்கு/ சேட்டைக்கு அடியோ திட்டோ வாங்குவது மட்டும் அல்லாமல் பெயருக்கு இரண்டு / மூன்று அடி சேர்த்து விழும். பிள்ளைகள் நலன் கருதி அவ்வாறு செய்யது இருத்தல் நலம்.


·        தொட்டில் பழக்கம்

·       நண்பர் ஒருவர். "அறம்" என்ற சொல்லுக்கு பொருள் அவர் என்பது போன்ற வாழ்க்கை முறையை கடைபிடிப்பவர். அவருக்கு ஒரே ஒரு கெட்ட பழக்கம். தமிழில் "ஓ" என்று துவங்கும் கெட்ட சொல்லை உயிர்வளியை(ஆக்சிஜென்) போல பயன்படுத்துவார். அவரை அனைவரும் "ஓ__" கிஷோர் என்று அன்புடன் அழைப்பர்.



·      "இப்படி இந்த சொல்லை பயன்படுத்துகிறாயே. நாளை உன் குழந்தை உன்னை பார்த்து இந்த சொல்லை பயன்படுத்தாதா? " என்று கேட்டதற்கு.."எனக்கு சற்று கடினமாக தான் உள்ளது. ஆனால், அந்த சொல்லை பயன்படுத்தாமல் பேசினால் ஏதோ இலக்கணப் பிழையுடன் பேசியது போலவே உள்ளது. ஒரு நிறைவாகவே இல்லை. நான் அதற்கு ஒரு பெரிய திட்டம் வகுத்து உள்ளேன். குழந்தையின் பெயரே "ஓ__" என்று வைத்து விடுவது. பள்ளி ஆசிரியர் முதல் தலைமை ஆசிரியர் வரை அதை சொல்லி அழைக்கும் பொழுது அது இயல்பாகி விடும்." என்றார். பிறகு நான் மட்டும் அந்த சொல் பயன்படுத்துவது தவறு என்றாகி விடாது அல்லவா?" என்றார்.


சிவனும் சக்தியும்


புதுமை - தாயின் முதல் எழுத்து + தந்தையின் முதல் எழுத்து.

நண்பர் பெயர் - ராகேஷ். அவரின் மனைவி பெயர் : தீபா.

அவரின் குழந்தை பெயர் : தீரா - இது மட்டும் அன்றி பள்ளியில் முதலெழுத்து குறியுடன்(initials) சேர்த்து பெயர் பதிவு செய்யும் பொழுது 
தீ.ரா. தீரா. 

"எப்படி என் பொண்ணு பெயர்? ஒவ்வொரு முறை சொல்லும் பொழுதும் எதிரொலிக்கிறது பார்த்தாயா? நாளை உலகம் முழுதும் எதிரொலிக்கும்" என்றார். ஆங்கிலத்திலும் D.R. என்று துவங்கும். மருத்துவர் ஆவதற்கு முன்பே. "Dr". நாளை என் மகள் மருத்துவர் ஆனால் ஆங்கிலத்திலும் எதிரொலிக்கும். 
"Dr.D.R.". 

எப்படி ?" என்றார்.  


சரி நண்பா.. ஒரு வேளை, உன் பெயர் சந்திரன் என்று இருந்து, மனைவி பெயர் - நிவேதா என்று இருந்து இருந்தால் - "சனி" என்று வைத்து இருப்பாயா? " என்று கேட்ட பொழுது , பதில் அளிக்காமல் facebook திறந்து என் நட்பை ரத்து செய்து விட்டு கிளம்பினார்.


நல்ல தமிழில் பெயர் வைக்க : peyar.in

Saturday, October 5, 2019

உண்மையான ராட்சசன் யார்?

ராட்சசன் - ஒரு பெரிய வெற்றிப் படம். அதில் ஐயம் ஏதும் இல்லை. அனால், யார் உண்மையான ராட்சசன்?




படம் வெளியாகி ஒரு வாரம் ஆகி இருந்தது. இரவுக் காட்சி, ரோகினி திரையரங்கம்.

எப்பொழுதுமே படம் துவங்குவதற்கு 5 நிமிடம் முன்பாகவே சென்று அமர்ந்து விடுவது வழக்கம்.

என் அருகில் ஒருவர் அமர்ந்து இருந்தார். அலைகளும் என் வாயும் ஒன்று என்பதால் அன்றும் ஓயவில்லை. அருகில் அமர்ந்தவரிடம் பேசுவோமே என்று "படம் செமையா இருக்காம் தல.  முண்டாசுப்பட்டி படத்தோட  director." என்று கூறினேன்.

"அவர் கேட்டாரா?" என்று நீங்கள் கேட்கலாம். கேட்கவில்லை தான். ஆனாலும் நான் அது போல பேசாமல் இருந்து இருந்தால் தான் ஆச்சர்யம்.


அருகில் இருந்தவர் :  "ஆமாம் பா. படம் ரொம்பவே நல்லா இருக்கு. அஞ்சாவது நாளா தொடர்ந்து night show வந்துன்னு இருக்கேன்.  8 மணிக்கு  போயி சரக்கு வாங்கி வீட்ல வச்சிடுவேன்.நேரா இந்த படத்துக்கு வந்துடுறது.   பயமா இருக்குமா. அந்த பயத்துலயே நேரா வீட்டுக்கு போயி குடிச்சிட்டு படுத்துகிறது. சும்மா குடிக்கக் கூடாது ல? ஏதாவது காரணம் இருக்கணும் ல? director mass பண்ணி இருக்கார்" என்றார்

"அருமை ணா. இந்த மாதிரி படம் எல்லாம் ஜெயிச்சா தான் நல்ல படம் நெறைய வரும்" என்றேன்.

அதற்குள் அவர் அருகில் அமர்ந்து இருந்த அவர் நண்பருடன் பேச ஆரம்பித்தார்.


முதல் காட்சி ஆரம்பித்தது.

இருவர் ஓடி வரும் காட்சி. நாய் குரைக்கிறது.

அண்ணன் அன்புடன் தோளைத் தட்டி,  "அந்த பின்னாடி இருக்கிற cement block-ல ஒரு body இருக்கும் பாரேன்" என்றார்.


"சரி ணா.. சரி ணா. நான் பார்த்துகிறேன்" - என்றேன்.

"இல்லை, நீ அதப் பார்த்து பயந்துடக் கூடாது ல?" என்றார்


விஷ்ணு விஷால் தயாரிப்பாளரிடம் கதை சொல்லிக் கொண்டு இருப்பார்.

"இப்போ ஒத்துக்க மாட்டாங்க. அப்புறம் , police ஆகி அந்த case-ஐயே கதையா எடுப்பாப்ல. climax-ல director ஆயிடுவார்" என்று தலை அசைத்துக் கொண்டே கூறினார்.

காவல் நிலையக் காட்சி வந்தது. "இந்த  பொம்பள பஜாரி மாறி பேசுவா. கடைசியா ஒரு scene-ல இவள பூட்டிட்டு ஓடிடுவான்." என்றார்.

கொஞ்சம் ஒரு 40 கோணம் அவருக்கு எதிர் புறமாக உடலை சாய்த்து அவரை விட்டு விலக முயன்றேன்.

"பாட்டு வரும் பாரு தேவை இல்லாத." என்றார்.

முனீஸ்காந்தின் மகள், விஷ்ணு விஷால் உடன் பேசிக்கொண்டு இருக்கும் முதல் காட்சி.

அப்போது, காது அருகில் வந்து "இந்த பொண்ணு கூட செத்துரும். பாவம். காப்பத்த try பண்ணுவாங்க. முடியாது" என்று உச்சு கொட்டி முடித்தார்.

ஒரு மாதிரி அவரைப் பார்த்தேன்.


இடைவேளையில் வேறு எங்காவது இருக்கை காலியாக உள்ளதா என்று பார்த்துக் கொண்டு இருந்தேன்.

தோளைத் தட்டினார் அண்ணன் -  "இந்தா பா. tea. உனக்கும் சேர்த்து வாங்கினு வந்தேன்"  என்று தேனீர் வாங்கி வந்து தந்தார்.. But, அந்த tea எனக்கு புடிச்சி இருந்தது.

முதன் முதலில், அரங்கில்  மந்திரம் செய்யும் காட்சி ஏதோ பின்னூட்டத்தில் வருகிறது.

"இந்த சனியன் தான் எல்லாரயும் சாவடிக்கும்.  ஆனா, அது பொம்பளையே இல்லை. பையன். செனியன் புடிச்சது. " என்றார்.

^ படத்தின் கருவே சொல்லி விட்டார். முடிஞ்சது சோலி.

விஷ்ணு விஷால், muneeskaanth மகளுக்கு ஒரு பரிசு அளிப்பார்.

அதைக் கையில் கொடுக்கும் போதே "keyboard குடுப்பாப்ள"

"அண்ணா, படம் பார்க்க விடுங்கணா. please" என்றேன்.

"நான் எதுவும் பேசல பா. நீயே பாரு."


ஒரு பெண்ணை கடத்த முயலும் பொழுது விஷ்ணு விஷாலின் மொத்த குழுவும் தூரத்தில் நின்று கண்காணிக்கும்.

"இது twins-உ. ஒரு பொண்ணு மாட்டிக்கும்.இன்னொன்னு s ஆயிடும். ஷார்ப்பு " என்று மிகவும் விறுவிறுப்பாக பார்க்கத் தொடங்கினார்.

விஷ்ணு விஷால் christopher வீட்டுக்குள் நுழைவார். ஏதும் கண்டு பிடிக்க இயலாது. எங்கு இருக்கக் கூடும் என்று யோசிக்கிறேன்.

"கீழ இருப்பான் அந்த பையன்" என்றார்.

அந்த பெண் ஒரு அறை வழியாக தப்பிக்க முயல்வார். அரங்கமே அந்தக் காட்சியில் இருக்கை நுனியில் அமர்ந்து பார்த்துக் கொண்டு இருக்கும்.

"இந்த பொண்ணு மாட்டிக்காது. easy-ஆ தப்பிச்சிரும்" என்றார்.

கொலை செய்வது பெண் அல்ல. ஆண் என்று வெளியாகும் காட்சியில் " நான் முதல்லியே சொன்னேன் ல. எப்புடி?" என்றார்.

காளி வெங்கட் துப்பாக்கி எடுத்து சுட முயல்வார்.

"டம்மி police. சுட மாட்டான்.  இவன் தான் செத்துபுடுவான்" என்றார்.

நிழல்கள் ரவி காப்பாற்ற முயல்வார். "டாக்டர் காலி" என்றார்.

இறுதிக் காட்சி -  விஷ்ணு விஷால், shutter பூட்டி இருப்பதைப் பார்ப்பார். அந்நேரம் வேறொருவர் அழைத்து ஏதோ சொல்ல  அங்கு இருந்து கிளம்ப முற்படுவார்.

"மேல இருந்து bubble முட்டை  வரும். அதை வச்சி கண்டுபுடிச்சுடுவான். அப்புறம் தான் fight. அப்புறம் climax". என்றார்

இப்படி, படம் முழுவதும் வர்ணனை செய்து வந்தார்.

படம் முடிந்தது.

எவ்வளவு நல்ல படம். எதுக்கு தேவை இல்லாம இவர் கிட்ட பேசினேன் என்று எண்ணி வருந்திக் தலையில் கை வைத்து கொண்டு இருந்தேன்..


"feelinga இருக்கா?  எப்படி, சொன்னேன் ல, director செமயா பண்ணி இருக்கான்ல? " என்றார்.

"அவர் பண்ணாரோ இல்லியோ ணா, நீ செமயா பண்ண ணா." என்று கண்ணில் நீர் ததும்ப கை குடுத்து கும்பிட்டுக் கிளம்பினேன்.


அன்று முதல் திரையரங்கம் சென்றால் அருகில் யாராவது அமர்ந்து "படம் போட்டு எவ்ளோ நேரம் ஆச்சு" என்று  கேட்டால் கூட " முஜ்கோ தமிழ் நஹி மாலும் சாஹிப்.மாப் கீஜியே" என்று கூறிக்கொண்டு வருகிறேன். 

Wednesday, June 6, 2018

மது புட்டி வாங்க வேண்டும் - குறும்பட நினைவுகள்

"காதல் எனும் முடிவிலியில்" கதாநாயகன் மது அருந்துவது போல ஒரு காட்சி. பொதுவாக, படப்பிடிப்புக்கு இரண்டு நாள்களுக்கு முன்னரே தேவையான அனைத்தையும் வாங்கி விடுவது வழக்கம். இந்த முறை, மது புட்டி வாங்க வேண்டும் என்பதை மறந்து விட்டோம்.

அந்த காட்சியை படம் பிடிக்கத் துவங்கும் பொழுது மாலை 7 மணி. அப்பொழுது தான் நினைவு வருகிறது - மது புட்டி வாங்க மறந்து விட்டோம் என்று.  நான், இயக்குனர் கார்த்திக், தயாரிப்பாளர் அருண், ஆவுடை நால்வரும் ஒருவரை ஒருவர் பார்க்கிறோம்.

நால்வரும் படி தாண்டா பத்தினிகள். மதுபானக்கடை வாசற்படியை மிதித்தலை பாவம் என்று எண்ணுபவர்கள் :)

யார் சென்று வாங்குவது? என்ன வாங்குவது? அதை வாங்கிய பின் மீண்டும் விற்க இயலுமா? என்ற கேள்விகள்.

அருண், ஏதோ யோசித்தவராய் "நான் செல்கிறேன்" என்றார்.

10 நிமிடங்களில் வந்து விட்டார். திரும்ப வருகையில், கையில் புட்டியுடன் வந்தார். மொத்தம் ரூ.250 ஆயிற்று என்றார்.


படப்பிடிப்பு முடிந்தது.  அந்த மூடியை திறந்து காட்டி, மொத்தம் "௨௫௦ ரூபாய் எல்லாம் இல்லை. ரூ.1 தான்" என்று சிரித்துக் கொண்டே கூறினார். நேரே காயிலான் கடை சென்று மது புட்டியின் விலையைக் கேட்டு உள்ளார். ரூ.1 என்று கூறிய உடன், அதில் நீரை நிரப்பி, ஒரு மூடியை எடுத்து அழுத்தி விட்டு எடுத்து வந்து விட்டார்.

பார்க்கவும் அந்த புட்டி சற்று அழகாகவே இருந்தது.



அன்று முதல் தான் "குறும்படத் தயாரிப்பாளர் திலகம்" என்று அருண் குமார் அனைவராலும் அன்போடு அழைக்கப் பெற்றார்.






Tuesday, June 5, 2018

ஒரு கோப்பைத் தேநீர் - குறும்பட நினைவுகள்

குறும்பட நினைவுகள்

எம் குழுவினர் எடுத்த சில குறும்படங்களின் சில காட்சிகளைக் காண்கையில் ஒரு சில காட்சிகளைப் படமாக்கிய விதம், ஓர் இனிய அனுபவமாய் நினைவில் இருக்கும்.

எமது நான்காம் படமான "காதல் எனும் முடிவிலியில்" பார்த்துக் கொண்டு இருக்கையில் ஒரு காட்சி.

கதாநாயகன் தேநீர் அருந்தும் காட்சி. 

ஒரு முகப்பில் இருந்து அந்த காட்சியை எடுக்க வேண்டும்.

ஒளிப்பதிவாளர் விமல், எந்த ஒரு காட்சியையும் கச்சிதமாக எடுக்க முற்படுபவர்.



கோப்பையில் தேநீரின் புகை தெரிய வேண்டும். அப்பொழுது தான் தத்ரூபமாக இருக்கும் என்று கூறி விட்டார்.


சமையல் அறையில் நீரை கொதிக்க வைத்து, கொண்டு வந்து ஊற்றினோம். புகை, கருவியில் தெரியவில்லை.

நண்பர் அருண், மிக அதிகமாக நீரை சூடேற்றி ஊற்றினார். அப்பொழுதும் புகை தெரியவில்லை.

நீர் சூடேற்றும் கருவியை முகப்புக்கு அருகில் வைத்து விட்டு,  நன்கு சூடேற்றி ஊற்றினார். அப்பொழுதும் தெரியவில்லை.


வேறு சில முயற்சிகளும் கை கொடுக்கவில்லை. நேரே பூசை அறை சென்றார். சாம்பிராணி எடுத்து வந்து கொளுத்தி விட்டார்.

கோப்பையை துடைத்து விட்டு, சாம்பிராணியை அதில் போட்டு விட்டார்.  "மூச்சை பிடித்துக் கொண்டு குடிப்பது போல் நடித்து விடு" என்று கிர்திக்கிடம் கூறினார். 

புகையைப் படம் பிடித்து ஆயிற்று.  அவ்வளவே! :)

அந்த காட்சி




Tuesday, May 15, 2018

இரவுக்கு ஆறு கண்கள்

இரவு பத்து மணி. ஒரு சந்திப்பை முடித்து விட்டு மிதிவண்டியில் வந்து கொண்டு இருக்கிறேன்.  சக்கர நெம்பகொலை(gear) மாற்றுகையில் ஆரங்கள் (spokes) இடம் பெயர்ந்து சிக்கிக் கொண்டன. முயன்று சரி செய்ய முயற்சித்தேன். நன்கு சிக்கி இருந்தன. சரி செய்ய இயலவில்லை. திருப்புளி தேவைப்பட்டது.

இல்லம், அங்கு இருந்து 4 தொலை அளவு அலகு(kilometer). மிதிவண்டியை நகர்த்த இயலவில்லை. அருகாமையில் இருந்த இரு சக்கர வாகனம் சீர் செய்யும் கடைக்கு சென்று திருப்புளி கேட்டேன். அரசின் வருவாய்க்கு பங்களித்து இருந்தார். பதில் ஏதும் கூறாமல் இல்லை என்பது போல் கையை அசைத்து கடையை மூடும் பணியில் தீவிரமாய் இருந்தார்.

சற்று தொலைவில் ஒரு கல்லெண்ணெய் நிலையம்.  திருப்புளி வினவினேன். இல்லை என்றும் எல்லாம் ஓர் அறையில் வைத்து பூட்டி விடுவோம் காலை தான் திறப்போம் என்றனர். 

பதில் ஏதும் பேசவில்லை.  மிதிவண்டியைத் தூக்கிக் கொண்டே  நடந்தேன். சற்று தொலைவில் பார வண்டி(Lorry) ஒன்று இருந்தது. அதில் இருவர் அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டு இருந்தனர்.

திருப்புளி கிடைக்குமா என்று கேட்டேன். அவர்களுக்கு தமிழ் தெரியவில்லை. தெலுங்கு பேசினர். என்ன ஆயிற்று  என்றனர். எனக்கு தெரிந்த தெலுங்கில்  வண்டியின் பிரச்சனையைக் கூறினேன். 

வண்டியில் இருந்து இறங்கி வந்து, அவர்கள் வண்டியின் முன் விளக்கைப் போட்டு என் மிதி வண்டியை சற்றே சிரமப்பட்டு ஒருவர் வண்டியைப் பிடிக்க, இன்னொருவர் பின் சக்கரத்தை தூக்கிப் பிடித்து திருப்புளி கொண்டு மாட்டி இருந்த ஆரங்களை விடுவித்து  சரி செய்தனர். அவர்களின் கைகள் எல்லாம் எண்ணெய்ப் பசை நன்கு படிந்து இருந்தது. நன்றி கூறி கிளம்பினேன்.   

சற்று தொலைவில் இருந்த கடையில் வாழைப்பழமும் சில மாச்சில்களும் வாங்கி வந்து அவர்களிடம் தந்தேன்.  அவர்கள் "எதற்கு இதெல்லாம். ஏற்கெனவே உண்டு விட்டோம்" என்று கூறினர்.  இந்த நேரத்தில் உதவி செய்ததற்கு மிக்க நன்றி, இல்லையேல் 4 தொலை அளவு அலகு என் மிதி வண்டியைத் தூக்கிக் கொண்டு தான் சென்று இருக்க வேண்டும்  என்று சொல்லி மீண்டும் கூறி கிளம்பினேன்.

வண்டியின் ஓட்டுநர் கீழே இறங்கி வந்து ஒரு மாங்காயும் ஒரு பப்பாளியும் தந்தார். "இது எங்க ஊரில் விளைந்தது.சுவையாக இருக்கும்." என்று கூறி என் பையில் திணித்தார். மறுத்தும் கேட்கவில்லை. கைகள் குலுக்கி நன்றி கூறி கிளம்பினேன்.

வேலை பளு, எட்டப்படாத இலக்குகள், விடுபட்ட வாய்ப்புகள் என்று காலை முதல் ஏதோ ஒரு சலனம் இருந்து கொண்டே இருந்தது. அந்தத் தருவாயில் ஏற்பட்ட அவதி, ஏதும் செய்ய இயலா ஒரு நிலை, இதற்கு இடையில், அவரின் பணியின் அலுப்புக்குப் பின் செய்த அந்த  உதவி, அவரின் இந்த செய்கை, அந்த புன்னகை - ஒரே நொடியில் அனைத்தையும் அலசி விட்டது.  மகிழ்ச்சியுடன் மிதி வண்டியை மிதித்து இல்லம் வந்து அடைந்தேன். 


இன்னமும் சின்ன சின்ன அன்பில் தான் வாழ்க்கை இருக்கிறது.

Tuesday, April 11, 2017

ஊட்டிக்கு தனியா தான் போகணும் போல இருக்கு !

மார்ச் மாதம் 9ஆம் தேதி, 2016. திங்கட்கிழமை காலை 9 மணிக்கு ஈரோட்டில் நண்பர் யோகானந்தனின் திருமணம். இது போல், வேண்டும் என்றே, வார நாளில் வெளியூரில் திருமணம் செய்வது எல்லாம் நாடி ,நரம்பு, இரத்தத்தில் எல்லாம் "கூட்டத்தை, செலவை  குறைப்பது எப்படி?" என்று யோசிப்பவராகளால் மட்டுமே இயலும். அந்த தந்திரம் எல்லாம் இவருக்கு பிறவியிலேயே இறைவன் அருளிய கொடை.

வெள்ளி மாலை, சென்னையில் இருக்கிறேன். பணிச்சுமை அதிகம். எப்படியும் திங்கள் ஈரோடு செல்ல வேண்டும். பயணம் செய்தும் நாள் ஆகிவிட்டது. உதகை செல்வோம் என்று திட்டம் இட்டேன். கோவைக்கு பேருந்தில் சென்று அங்கு இருந்து உதகைக்கு சென்றேன். எந்த முன் ஏற்பாடும் செய்யவில்லை. பார்த்துக்கொள்ளலாம் என்று கிளம்பி விட்டேன். சபரி மலைக்கு மாலை அணிந்து இருந்ததால் கூடுதல் தாடியுடன் குளிருக்கு இதமாய் இனிமையான பயணம். 

"தனியாகவா?" என்று கேட்போருக்கு எல்லாம்  ஒரே பதில் தான். என்னுடன் சுற்றிய உல்லாசப் பறவைகள் எல்லாம் கூண்டுக்காகங்கள் ஆகி விட்ட காரணத்தினால், மகான் மணிவண்ணன் "அமைதிப்படை" படத்தில் கூறியது போல் ஊட்டிக்கு தனியாக  தான் சென்றேன். 

உதகை பேருந்து நிலையத்தில் இறங்கியவுடன் ஒருவர் வந்தார். "அறைகள் இருக்கின்றன. வேண்டுமா?" என்றார். சரி என்றேன். 

ஒரு தங்கும் விடுதி காண்பித்தார். பிடித்து இருந்தது. சரி என்றதும் அந்த விடுதியின் வரவேற்பு அறையில் இருந்த ஒரு சின்ன பையனிடம் தனக்கான தரகு பணத்தை பெற்று வேகமாக சென்று விட்டார்.

2 நிமிடம் கழித்து, அந்த விடுதியின் மேலாளர் வந்தார். "நீங்களா தங்க போறீங்க?" என்று என்னை உற்று பார்த்து  கேட்டார்.  ஆம் என்றேன்.

அவர் என்னை கேட்ட கேள்வியை இதுவரை யாருமே கேட்டதில்லை. 

"நீங்க தற்கொலை பண்ணிக்க மாட்டீங்க இல்ல?" என்றார்.

தூக்கி வாரி போட்டது. இது புதுசா இருக்கே என்று எண்ணி "ஏன் கேட்கிறீர்கள்?" என்றேன்.

"இந்த மாதிரி தாடி வச்சிக்கிட்டு தனியா ஊட்டி வருபவர்கள்  எல்லாம் தற்கொலை பண்ணி செத்து இருக்காங்க. அதனால தான்" என்றார்.

என்னுடன் 10 நிமிடம் பேசினால் நீங்க தற்கொலை செய்து கொள்வீர்கள் என்ற உலக உண்மையை மனதுக்குள் நினைத்தேன். 

நன்கு யோசித்து பார்த்தேன். தரகு பணம் வேறு தந்து ஆயிற்று. அறைகளும் இந்த காலத்தில் நிரம்பாது. இவர் நம்மை அனுப்ப வாய்ப்பே இல்லை என்பதை தீர்மானித்தேன்.

கண்டிப்பாக  இவரை வெறுப்பேற்றி தான் இன்று பொழுதை போக்க இறைவன் நம்மை உதகைக்கு அனுப்பி இருக்கிறார். வந்த கடமையை முழுதாய் செய்து விடுவதாய் முடிவு செய்தேன் . 

"அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. நண்பர் திருமணம் ஈரோட்டில். ஆதலால் இங்கு வந்தேன்." என்று வேண்டும் என்றே இறுக்கமாய் முக பாவனையை மாற்றி சொன்னேன்.

"ஏன் இவ்ளோ தாடி வச்சி இருக்கீங்க ? எங்கே பணி புரிகிறீர்கள் ? " எல்லாம் கேட்ட பின்னும் மிகுந்த தயக்கத்தில் இருந்தார். "தற்கொலை எல்லாம் தப்புங்க. அப்படி எதுவும் பண்ணிடாதீங்க." என்றார். 

"அவ்வளவு பயம் இருந்தால் வேண்டாம். நான் வேறு விடுதிக்கு செல்கிறேன்"என்றேன். 

"வேண்டாம். தரகு பணம் வேறு தந்து ஆயிற்று. அறைகளும் இந்த காலத்தில் நிரம்பாது. தங்குங்க. நான் சொன்னதை மனசுல வச்சிக்கோங்க. 350 ரூபாய்க்கு ஆசைபட்டு சிறைக்கு போய் விடுவேன் போல் இருக்கிறது." என்று புலம்பிய படியே சாவி தந்தார்.

"ஓரே ஒரு வேண்டுகோள். நான் காண்பித்த அறை வேண்டாம். வரவேற்பு அறைக்கு அருகில் இருக்கும் அறையை எடுத்துக் கொள்ளுங்கள்" என்று கூறு கூறினார். பதில் பேசாமல் அறைக்குள் சென்றேன்.


குளித்து விட்டு வெளியே கிளம்பினேன்.  அடக்க முடியாத சிரிப்பு. ஆனால், வேண்டும் என்றே சோகமான பாடல் எல்லாம் பாடி, முகத்தை சோகமாகவே அவர் முன் காண்பித்தேன்.

"எங்கே போக போறீங்க?" என்றார்.

"தொட்டபெட்டா" என்றேன். உடனே, கைகளை வணங்குவது போல் வைத்து கொண்டு கண்களை மூடி வேண்டி "அங்க தான் தற்கொலை தளம் இருக்கு. போகாதீங்க " என்று கெஞ்சினார். 

அவரை லேசாக தோளில்  தட்டி, சரி என்பது போல் தலை ஆட்டி மனதுக்குள் சிரித்து கொண்டே வெளியே வந்தேன்.  

தொட்டபெட்டா நடந்து சென்று விட்டு , அனைத்து  இடங்களும் சுற்றி விட்டு, ஏரிக்கு சென்றேன்.

படகு சவாரி செய்ய சீட்டு வாங்கி விட்டு, படகில் ஏறச்சென்றேன். 

"ஒரே ஆளா?" என்றார். ஆம் என்றேன்.

"நீச்சல் தெரியுமா ?" என்றார்.

" தெரியாது. ஆனால், 2-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் "நீச்சல் அடிப்பது எப்படி?" என்ற கட்டுரையைமனப்பாடமாய் எழுதி முதல் மதிப்பெண்  பெற்றவன் நான் என்று கூறிய பெருமையை அவர் ஏற்று கொள்ளவில்லை. 

"இறங்குங்க" என்று பதமாக சொன்னார்.

நீச்சல் தெரியாவிடில்  உயிர் கவசம் தர சொல்லி கேட்டேன்.

"கொடுப்பேன். ஆனால், நடு ஏரியில் சென்று அதை கழட்டி போட்டுட்டு நீங்க விழுந்து தற்கொலை பண்ணிக்குவீங்க. அப்படி  தானே" என்றார். என்ன செய்வதென்றே தெரியவில்லை.

"நீங்க சீட்டை திரும்ப கொடுத்து விட்டு, பணத்தை திரும்ப பெற்று கொள்ளுங்கள்" என்றார்.

"சரி. தனி படகு வேண்டாம். 10 பேர் செல்லும் படகில் ஏற்றி விடுங்கள்" என்றேன்.

"அதுவும் தெரியுமே. நடு ஏரியில் சென்று நீங்கள் குதித்து தற்கொலை செய்வது மட்டும் அல்லாமல் பயத்தில் படகையும் சேர்த்து பிடித்து கவிழ்த்து விடுவீர்கள்" என்றார்.

"சத்திய சோதனை" என்று கூறி பணத்தை திரும்ப பெற்று, உண்டு விட்டு இரவு அறைக்கு சென்றேன்.

இதற்கு இடையில் நம் கதையின் கதாநாயகன்  மேலாளர், இரண்டு , மூன்று முறை அழைத்து "எங்க இருக்கீங்க ?" என்று அழைத்து நான் உயிருடன் இருப்பதை உறுதி செய்ததால் , அவரை வெறுப்பேற்ற முடிவு செய்து அலைபேசியை அணைத்து விட்டேன்.

மேலாளர், விடுதி வாசலில், பிரசவ அறையில் அலையும் கணவனை போல் அலைந்து கொண்டு இருந்தார்.  என்னை பார்த்ததும்  கண்ணுல தண்ணி வச்சுட்டார். எனக்கு சிரிப்பை அடக்க இயலவில்லை. "எங்கங்கே போனீங்க? ஏன் அலைபேசியை அணைத்து  விட்டீர்கள்?"  என்றார்.

பதில் கூறாமல் சிரித்து கொண்டே சென்றேன்.

பின்னாடியே நடந்து வந்தார். "ஒரே ஒரு உதவி" என்றார்.

"சொல்லுங்கள்"என்றேன்.

"கதவைத் திறந்து வச்சிட்டு தூங்குறீங்களா?" என்றார்.

"எதற்கு?" என்றேன்.

"திடீர்னு தொங்கிட்டீங்கன்னா நான் ஓடி வந்து காப்பாத்திடுவேன்" என்றார்.

சிரிப்பு வருகிறது. வெளிக்காட்டாமல்  வேகமாக உள்ளே சென்று கதவை மூடினேன். கதவைத் தட்டி உள்ளே வந்து  "சாளரம் மட்டுமாவது திறந்து வைக்க முடியுமா? என்றார். "முடியாது. எனக்கென்று தனியுரிமை வேண்டும்" என்று கூறி விட்டேன். 

நன்றாக நிழல் தெரிந்தது. என் அறை வாசலின் அருகிலியே நான் உறங்கும் வரை அமர்ந்து இருந்தார்.

காலை 4 மணிக்கு எல்லாம் விழிப்பு வந்து விட்டது. குளித்து விட்டு கிளம்பி விட்டேன். அவரும் மற்ற விடுதி ஊழியர்களும் நன்கு உறங்கிக்  கொண்டு இருந்தனர். 

5.30 மணிக்கு அலறி அடித்து என் அலைபேசிக்கு அழைத்தார். எடுத்தேன்.

"எங்க இருக்கீங்க?" என்றார். கோவை பேருந்தில் சென்று கொண்டு இருப்பதாய் சொன்னேன்.

"தற்கொலை செய்யாமல் உயிருடன் திரும்ப சென்றதற்கு நன்றி." என்று கூறி அழைப்பை துண்டித்து விட்டார்.

மற்றற்ற மகிழ்ச்சி!

Friday, April 7, 2017

தெய்வமும் குழந்தையும்

என் அக்கனின் இளைய மகன் - வைபவ் கார்த்திகேயன்.
(^ அண்ணன் = அண்ணா ; அக்கன் = அக்கா )

முதல் முறை, தொட்டிலில் இருந்து நான் தூக்கியது முதல் இன்று வரை, என் அக்கனிடம் கூட செல்லாமல் காலை முதல் இரவு வரை, கரம் பிடித்தோ, கட்டி அணைத்தபடியோ மட்டுமே இருப்பான்.

கிட்டத்தட்ட, ஓராண்டுக்கு முன், (4 வயது இருக்கும் அவனுக்கு அப்பொழுது).

இரவு நேரம். அவனைத் தட்டி உறங்க வைத்து விட்டு, சிலவற்றை யோசிக்கிறேன். தொழிலில் சின்னதாய் ஒரு சறுக்கல், தேக்க நிலை, சில இழப்புகள்.ஆழ்ந்த மனக்கேதம்.  திரும்பி இவனை பார்க்கிறேன். விழித்து இருக்கிறான். என்னை பார்த்த உடன், ஒரு கையை ஊன்றி, தூக்கக் கலக்கத்தில் எழுந்து என்னை உற்றுப்  பார்க்கிறான்.

வைபவ் :  மாமா, ஏன் ஷோகமா(ச = அவர் மொழியில்  ஷ) இருக்கீங்க ?

நான் : ஒன்னும் இல்லை டி! நீ தூங்கு.

வைபவ் : இல்ல, நீங்க ஷோகமா தான் இருக்கீங்க.

துக்கம்,  புன்னகைக்கு  இடம் தரவில்லை.

தன் கையை எடுத்து "கொஞ்சம் இருங்க" என்று கூறி

முகம் கழுவிய உடன் முகம் துடைப்பது போல், அவன் கையை எடுத்து மேலிருந்து கீழாக என் முகம் துடைத்தான்.

"இப்போ ஷோகம் போயிடுச்சா ?" என்றான்.

அவன் செய்கையைக் கண்டு லேசாக  ஓர வாயில் புன்னகைத்தேன்.

"ஹும். இங்க இன்னும் கொஞ்சம் ஷோகம் இருக்கு" என்று கூறி மறு கன்னத்தையும்  சற்று அழுத்தமாய் அழுத்தித் துடைத்தான்.

அவன் அன்பு, செய்கை, அதன் உன்னதம், அந்த அறியாமை எல்லாம் கண்டு முழுதாய் சிரித்தேன். "இப்போ பாருங்க ஃபுல்லா ஷோகம் போயிடுச்சு".  என்று சொன்னான். கட்டி அணைத்தேன். வழக்கம் போல் முத்தமிட்டான்.

வைரமுத்து அவர்களின் வரி தான் நினைவுக்கு வந்தது  - "அட பாசம் மட்டும் போதும் கண்ணே! காசு பணம் என்னத்துக்கு ?" என்ற எண்ணம். நிம்மதியாய் உறங்கினேன்.

"இறைவனை நேசியுங்கள். அவர் தம் கரங்களால் உங்கள் துயரங்களைத் துடைத்திடுவார்"  என்று ஒரு சுவற்றில் படித்த நினைவு.



அன்பிற்கினிய வைபி,

நாளை நீ வளர்ந்து, இந்தப் பதிவைப் படித்து, புரியும் தருவாயில், என் துயரை நீக்கியதற்கு, உன்னை காற்று உட்புகா வண்ணம்  நான் கட்டியணைத்து  நூறு முத்தங்கள் இடுவதாய்  நினைத்துக் கொள். காவிக்கண்டுகள் (chocolate) முதல் முத்தங்கள் வரை என் கருமித்தனத்தை நீ பொறுத்தருள்வாயாக!

Wednesday, April 5, 2017

போதையில் புத்தி மாறுமா?

சில நாள்களுக்கு முன் நடந்த சம்பவம்.

நண்பரின் தந்தை, அவர் வீட்டில் இருந்து  அருகில் இருக்கும் இன்னொரு நண்பரின் இல்ல நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டி இருந்தது.

இரு சக்கர வாகனத்தில் அவரால் அமர முடியாத காரணத்தால், மூன்று சக்கர வாகனம் ஒன்றை அழைக்க சென்றேன்.

மிக அருகில் செல்ல வேண்டும் என்ற காரணத்தால் யாருமே வர முன் வரவில்லை.

ஒரே ஒருவர், "நான் வர்றேன்" என்றார். அவர், மது அருந்தி இருந்தது நன்றாகவே தெரிந்தது. ஓரளவு நல்ல போதை. ஆனால், வேறு வழி இல்லை.  சற்று நிதானமாகவே ஓட்டினார்.

"எவ்வளவு?" என்று 2-3 முறை கேட்டேன்.

"நீ குடுக்கிறதை குடு" என்று சொல்லி என்னை பின் தொடர ஆரம்பித்தார்.

நண்பரின் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தி விட்டு, நண்பரின் தந்தையை அழைக்க சென்றேன்.

உடல் நலம் காரணமாக நண்பரின் தந்தை கிளம்பி வர சற்று தாமதம் ஆகும் என்று நான் யூகித்தேன். மூன்று சக்கர வாகன ஓட்டுனரிடம் "வர சற்று தாமதம் ஆகும். காத்திருப்புக்கு  தனியே பணம் தருகிறேன். தயவு செய்து காத்திருக்கவும்." என்றேன். சரி என்று தலை ஆட்டினார்.


நண்பரின் தந்தையை அழைக்க சென்றேன்.  15 நிமிடங்கள் ஆனது. அடிக்கடி வெளியே எட்டி பார்த்தேன்.  அவர் அங்கேயே காத்திருந்தார்.

நண்பரின் தந்தையை வண்டியில் ஏற்றி விட்டேன். அவர் பணப்பையை எடுத்து வர மறந்து விட்டார். அவர் கையில் - ₹20 தாள் 
ஒன்றும் , ₹50 தாள் ஒன்றும் தந்தேன்.

நண்பரின் தந்தை காதில் சொன்னேன்  - "முதலில் ₹50 தாங்க. பிரச்சினை பண்ணா, இந்த  ₹20 கொடுத்து விடுங்கள்." என்று சொன்னேன். அந்த வாகனம் கிளம்பியது.பொறுமையாக ஒட்டி செல்ல சென்றேன். சரி என்று தலை அசைத்து கிளம்பினார்.

எனக்கு அலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது. பேசிக்கொண்டு இருந்தேன். பின்பு, அந்த நிகழ்ச்சிக்கு சென்றேன். 

அந்த மூன்று சக்கர வாகனம் எதிரில் வந்தது. அந்த ஓட்டுநர் என்னை பார்த்து  "பத்திரமா விட்டுட்டேன் பா". என்றார். "நன்றி" என்று கூறி சென்று விட்டேன்.

நண்பரின் தந்தையிடம் சென்று "எந்த பிரச்சனையும் பண்ணாம காசு வாங்கிகிட்டு போயிட்டாரா ?" என்றேன்.

நண்பரின் தந்தை சொன்னார் - "நீ சொன்ன மாதிரி , முதலில் ₹50 தான் குடுத்தேன். அவன் திரும்பி பார்த்தான். எதுக்கு வம்புனு ₹20 தாளையும்  குடுத்தேன்." 

அந்த ஓட்டுநர் -  "போதையில வேற இருக்கேன். வயசானங்கவ-னு சொன்னார். அந்த கொறஞ்ச தூரத்துக்கு எவனும் ஸ்டாண்ட்ல வர மாட்டான். அதான் வந்தேன். ₹20 போதுங்க." என்று கூறி ₹50 தாளை திரும்ப தந்து விட்டு கிளம்பி விட்டாராம்.

இமான் அண்ணாச்சியின் நகைச்சுவை ஒன்று தான் நினைவுக்கு வருகிறது  - "குடிகாரன் எல்லாம் குழந்தை மாதிரி".

இந்த பதிவு, குடிப்பழக்கத்தையும் மது அருந்துபவர்களையும். எந்த வகையிலும் ஆதரிக்கவில்லை. எதிர் பாராத நபரிடம் இருந்து வந்த எதிர் பாராத நல்ல செய்கை. அதை பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே.

Wednesday, January 4, 2017

என் வாழ்க்கையின் ஆக சிறந்த நாள் !

அது ஒரு அழகான புராட்டாசி மாதம். வழக்கம் போல இரவு . அது ஒரு shared service apartment. 4 இரட்டை படுக்கை அறைகள்  இருக்கும். shared Toilets + bathrooms. மதியம் 1 மணிக்கு  எழுந்து குளிக்க போறேன்.

பல சிறப்பு அம்சங்கள், அந்த அபார்ட்மெண்ட்ல  - அதுல முக்கியமானது - அந்த பூட்டு   -


இரு பக்கமும் பூட்ட  இயலும். உள்ளே அழுத்தி பூட்டி விட்டால் , சாவி போட்டால்  மட்டும் தான் திறக்கும்.

அது தான் இந்த கதையோட கதாநாயகன். குளித்து  முடித்த  உடனே தான் ஞாபகம் வந்தது. அறையை  உள்பக்கம்  பூட்டி சாவி எடுக்க மறந்துட்டேன். அறையின்  உள்  தான்  பணம் , அலைபேசி  எல்லாமே இருக்கிறது. போச்சு டா.

குளிக்க போகும் போது என்ன blazers-ஆ போட்டுட்டு போக முடியும்? லுங்கி.  சேகர் செத்துட்டான்.  வேற வழியே இல்லை. இன்னும் 1 hour -ல client  meeting இருக்கு. எட்டி பார்த்தேன். கொடியிலே பக்கத்து ரூம் ல இருந்த ஒரு பொண்ணோட டீ-shirt மட்டும் தான் இருந்துச்சு. சுட்டுட்டேன் . மன்னிக்கவும். இதுல கொடுமை என்னவென்றால் - அந்த சட்டையில் "babe" னு வேற எழுதி  இருக்கு.

so, as per the fashion statement,






அந்த டீ-ஷர்ட் , நான் போட்டப்ப sleeveless  மாதிரி ஆகிடுச்சு  + பாதி வயிறுக்கு கீழ வரல. ஏத்தி கட்டுடா லுங்கிய!

sleeveless short கருப்பு கலர் babe - women டீ-ஷர்ட் + colourful லுங்கி + பாத்ரூம் slippers.

நினைச்சி பார்த்தா, எனக்கே கொடூரமா இருக்கு. வேற வழியே இல்லாததால, இப்படியே ஆபீஸ்-கு நடந்து போனேன். தலை தாழ்ந்து, எவனையும் பார்க்காம நடந்தேன்.  அந்த ஆபீஸ் லொகேஷன் - இதோ, கீழ இருக்கே - இந்த இடம் தான்.



பக்கா  business சென்டர். எல்லாம் செம formals-ல சுத்துற இடம். ஏதோ ஒரு english novel-ல வர்ற ஒரு டயலாக் தான் ஞாகபம் வந்துச்சு . - "What a girl like you doing in a place like this ?" மாதிரி தான் நம்ம இந்த இடத்துல இருக்கோம்னு நெனச்சேன்.

Office செக்யூரிட்டி - என்னை block பண்ண வந்துட்டு - "நீயா ?" அப்டினு பார்த்துட்டு, என்னை ஓரளவு முன்பே தெரியும் என்பதால்  விட்டுட்டார். அவசரம் அவசரமா lift -கு போனேன். 

ஆத்தாடி - மொத்த கூட்டமும் அங்க தான் இருந்துச்சு. மின்னல் மாதிரி வேகமா, லிப்ட்-கு பக்கத்தில இருந்த படியில் எவனும் பார்க்கிறதுக்கு முன்னாடி ஏறினேன். 

office-ல எதுக்கும் இருக்கட்டும்பண்ணிட்டு  னு ஒரு formals வச்சி இருந்தேன். அத நம்பி தான் போனேன். ஒரு spare key, என்னோட friend கிட்ட மட்டும் தான் இருந்துச்சு. தலையை குனிஞ்சி கிட்டே ஓடும் போது தான் , என் friend , என்னை விட வேகமா கீழ போயிகிட்டு இருக்கான். 


"என்ன மச்சான் இது ? ladies டீ-shirt, லுங்கி , பாத்ரூம்'ஸ்லிப்பர்ஸ் ? fancy dress competition ஆ ?" - னு கேட்டான். "மச்சான், தயவு செஞ்சி டிரஸ் எடுத்துட்டு வா" னு கெஞ்சி கட்டளை இட்டேன். டிரஸ் change  பண்ணிட்டு, மீட்டிங் போனேன். Office phone எடுத்துட்டு, meeting போனேன்.

மீட்டிங் cancelled னு என் friend, ஆபீஸ் phone-கு  call பண்ணி சொன்னான் . சூப்பர்.

வேகமா நடந்து வந்தேன். ரயில்வே station-க்கு உள்ள போகும் போது, friend  போன் பண்ணி சொன்னான், "client office ல இருந்து திரும்ப call வந்துச்சு. "meeting இருக்கு-னு". train ஏறாம , திரும்ப client ஆபீஸ் போக வெளியே வந்தேன். 

குறுக்க நெடுக்க நடந்ததாலவும், தாடியில் மூஞ்சிய ஒளிச்சி  வச்சி இருந்தாதாலும்  Jay walking + Terrorist -னு சந்தேகப்பட்டு police சுத்தி வளைச்சிருச்சு.

Police : Why are  you going in and out of the station?
Me : My meeting was cancelled and re-scheduled. So, I had to go.
Police: Show me your IC.
Me : (அது தான் ரூம் -ல பத்திரமா இருக்கே). Sorry, I missed it in my room.
Police : Tell me your mobile number
சொன்னேன்.
அதுல ஒரு போலீஸ், phone எடுத்து யாருக்கோ கால் பண்ணினார். நான் relaxed-ஆ இருந்தேன். 
போலீஸ் : Why is your phone ringing and you are not picking the call?

அட ராமா , என் நம்பர்க்கு கால் பண்ணி இருக்கான்.
Me: Sorry, I kept in my room.
போலீஸ் : No IC . No மொபைல்!!!  But, you have another phone in your pocket.-னு 
சொல்லி அதை வெளியே எடுக்க சொன்னார்.

Me: Sir, that is my office phone number. -னு சொல்லி அதை அவரிடம் கொடுத்தேன்.

போலீஸ் : now, tell me this phone's number.

உச்ச சனி ! எனக்கு அந்த நம்பர் ஞாபகம் இல்லை.

Me : Sir, I don't know this number.
போலீஸ் : Too suspicious.

பல்வேறு கட்ட விசாரணைக்குப் பின், போலீசை நான் விடுவித்தேன். லேட்டா மீட்டிங் போனேன். Client - நான் phone-உம்  எடுக்கல, மீட்டிங்குக்கும் வரல -னு கோபப்பட்டு வெளியே போயிட்டார்.

எல்லா உண்மையும் சொல்லி ஒரு வழியா கஷ்டப்பட்டு, office போயி ஆபீஸ்-ல அதுக்கு explanation சொல்லி முடிச்சேன்.

இதுக்கு மேல உடம்பு தாங்காது-னு சொல்லி, room -கு போக முடிவு எடுத்தேன்.

ரூம் - spare key எடுத்துட்டு போயி, room-ஐ திறந்து, அந்த பொண்ணோட டீ-shirt-ஐ துவைச்சு காயப்  போடறேன். கரெக்ட்-ஆ அந்த பொண்ணு பார்த்துடுச்சு.  

என்னோட situation -அ , அந்த பொண்ணுக்கு சொல்லி புரிய வச்சி .... ச்சை . ச்சை .. அந்த நேரத்தில, அந்த பொண்ணு கூட, அந்த பொண்ணோட friends நாலு பேரு. கெக்க பேக்கே -னு எல்லாரும் சிரிக்க....... shame , shame , puppy  shame.

Now, tell me if a day can get better than this!  So , அந்த நாள் தான் - என் வாழ்க்கையின் ஆக சிறந்த நாள் !

Friday, August 12, 2016

தெய்வமும் 200 மீட்டரும்

An interesting incident that happened in 2011.

Let us switch on the கொசுவர்த்தி in the anti-clockwise direction!

பெசன்ட் நகர் பீச்ல- நைட் 2 மணி வரைக்கும் நண்பன் E.கார்த்தி கூட மொக்கய்ய போட்டுட்டு, அவனோட புது i 10 எடுத்துட்டு ஊருக்கு கிளம்பினேன்.  ஒரே ஒரு சின்ன hint - கார்த்தி எப்பவும் 2 போன் வச்சிருப்பார். 1- personal ; 1 - office  சப்போர்ட் phone. இந்த information இப்போ எதுக்குன்னு புரியாது. வீட்ல போயி உட்கார்ந்து  யோசிச்சா மட்டும் தான் புரியும்.

என்னை பத்தி நல்லா தெரிஞ்சதால  385 times  கேட்டான் - "எப்படி போகணும்னு வழி தெரியுமா டா ?" ன்னு.

"மச்சான். நான் பார்த்துகிறேன். safe-ஆ போயி சேர்ந்துருவேன்."

அக்கறையரோட  அவன் சொன்னான் - "உனக்கு என்ன ஆனாலும் பரவா இல்ல. கார் மேல ஒரு சின்ன scratch கூட விழ கூடாது."


சரி என்று சொல்லி, ஒரு வழியாக எடுத்து சென்றேன்.


ஒரு வழியா, பெருங்களத்தூர் - மதுரவாயல் route -அ பிடிச்சிட்டன்.


ஏதோ ஒரு எடத்துல left-ல இறங்கணும்னு தெரியும். ஆனா, slight confusion -ல மிஸ் ஆகிடுச்சு. எங்கேயுமே , அடுத்து left turn வரவே இல்ல.

ஒரு வழியா, புழல் சென்று அடைந்தேன்.

அங்க 4 ஹிந்தி லாரி drivers இருந்தாங்க. அவங்க , ஏதோ வழி சொன்னாங்க. அந்த வழியில போனா ,  ஏதோ ஒரு சந்து வருது. அதுவும் முட்டு சந்து. எடு reverse-அ. சத்தியமா, நான் எங்கே இருக்கேன்-ங்கிற hint  கூட இல்ல. ஏதோ ஒரு mtc பஸ் போனது. எப்படியும் இது கோயம்பேடு போயிடும். அங்க இருந்து, வேலூர் போற bus பின்னாடியே போனா  ஊரு வந்துடும் னு follow  பண்னேன். என் நேரம் - அந்த பஸ் break down.

அங்க ஒரு மகான் இருந்தாரு. தெய்வீகக் கலை.

தெய்வத்திடம் வழி கேட்டேன்

தெய்வம் சொல்லியது - "இப்படியே போ மானிடா ! 200 metres -ல ஒரு bridge வரும். அது மேல ஏறினா, ஒரே straight -வேலூர் தான்."

தெய்வத்திடம் நன்றி சொல்லி கிளம்பிய பொழுது  "bridge  கிட்ட இறங்கி கிட்டுமா ?"- என்று தெய்வம் lift கேட்டது.

"இந்த உலகமே உன்னுடையது தெய்வமே! வா தெய்வமே!" என்றேன்.

"Late night-ல strangers -கு லிப்ட் கொடுக்கிறது எல்லாம் risk"என்று பிதற்றும் மானிடர்களுக்கு நான் கூறி கொள்ள விரும்புவது என்னவென்றால்  - "தெய்வம் என்னைய விட ரெம்ப டம்மி யாக இருந்தது. அதனால தான் அந்த lift-எ குடுத்தேன். Moreover, Night  time , அந்த bridge -கு பதிலா, நம்ம வேற பிரிட்ஜ் ஏறி - மகாராஷ்டிரா , கல்கத்தா -எங்கயாவது போயிட்டோம்-னு வைங்க. எதுக்கு ரிஸ்க் என்று தான் ஒப்புக் கொண்டேன்."


பிரிட்ஜ் சென்று அடைந்தேன். தெய்வம் - இறங்கியது. "இந்த பிரிட்ஜ் தானே? வேலூர் போவும் -ல.. வேலூர். வேலூர் ?" என்று, கோர்ட் தவாரி போல் மூன்று முறை கேட்டு, பிரிட்ஜ் ஏறினேன். "வேலூர் - 180 km"- என்று sign போர்டு பார்த்தவுடன் தெய்வத்துக்கு மனதுக்குள் நன்றி சொன்னேன்.

பாதி தூரம் கடந்து சென்ற பின் , செல் போன் ஒலித்தது. கார்த்தி, தனது ஆபீஸ் சப்போர்ட் போன்-ஐ காரிலியே  தவற விட்டு இருக்கிறார்.

வண்டியா ஓரமா பார்க் பண்ணிட்டு , போன் attend பண்ணி - "Sir, கார்த்திக் has left his phone in the car. I will ask him to give you a call back"- என்று கூறி கட் பண்ணிட்டேன்.




திரும்பவும் இன்னொரு அழைப்பு. எதுக்கு கார்த்தியோட ஆபீஸ் phone -ஐ நாம் அட்டென்ட் பண்ணனும் என்று யோசித்து  silent -ல போட்டுட்டு வீட்டுக்கு போயிட்டேன்.

என்னை விட தன் கார் மீது கொண்டு இருந்த அக்கறையால், கார்த்தி அழைத்தார். "டேய், கார் correct -ஆ உன்னை கொண்டு வீட்டுல சேர்த்துடுச்சா ?"

கார் கொடுத்த  அடிமை கார்த்தியிடம் ஆணவமாய் பேசினேன்   - "சிக்னல் சரியா இல்ல. 10 வருஷம்  கழிச்சி பேசுறேன். By the by, உன் ஆபீஸ் போன் என் கிட்ட தான் இருக்கு. ஒரு நம்பர்-ல இருந்து close டு 25 calls வந்து miss ஆகி இருக்கு.  மேனேஜர் யாராச்சும் கால் பண்ணின்னா, colorful words-ல  தான்  reply பண்ணுவேன். புரியுதா?  ".


கார்த்தி : "டேய். என் ரெண்டு phone -உம் என் கிட்ட தான் இருக்கு. நீ கண்ணாடி போட்டு பாரு. அது உன் phone -ஆ இருக்கு போகுது!"

கண் பார்வை அந்த அளவுக்கு மோசம் ஆகலியே-ன்னு நெனைச்சி எடுத்து பார்க்குறேன்.  அது என் phone இல்லையே  என்று பார்க்கும் பொது திரும்ப அந்த number-ல இருந்து கால் வருது.

Attend பண்ணினேன்.

நான் : ஹலோ

எதிர் முனை  : சார்

(எங்கேயோ கேட்ட குரல் மாதிரி இருக்கே!)

நான் : சொல்லுங்க

எதிர் முனை  : நான், இன்னிக்கு காலைல உங்க கார்ல lift  கேட்டு வந்தேன்.

நான் : (அட... நம்ம தெய்வம். ) சொல்லுங்க.

எதிர் முனை  : phone உங்க கார்-ல மிஸ் ஆகிடுச்சு.

நான் : சூப்பர் !!!! சொல்லுங்க சார்!

தெய்வம்  : (அதீத நக்கலுடன் )அதுல முக்கியமான நம்பர் எல்லாம் இருக்குது. நான் ஒரு real எஸ்டேட் ஏஜென்ட். சீக்கிரமா எடுத்துட்டு வந்து சென்னைல குடுக்க பாருங்க. நெறய வேலை இருக்கு.

நான் : ஓ , அப்படியா ? எனக்கு, அடுத்த 20 வருஷத்துக்கு  சென்னை வர்ற வேலையே இல்லையே !

தெய்வம்  : சார் , please  சார். நான் வேணும்னா உங்க ஊருக்கு வரவா ?

நான் : வாங்க. but , நான் கொஞ்சம் busy -ஆ தூங்கி கிட்டு இருப்பேன். இருந்தாலும் try பன்ரேன்.

ஊருக்கு எப்படி வர வேண்டும் என்றும் வழி சொன்னேன். தெய்வம் எனக்கு வழி சொல்லுச்சு. நான் இப்போ தெய்வத்துக்கு வழி சொல்லிட்டேன். Draw the match.

நான் : அப்புறம், எங்க வீடு, ஒரு interior village -ல இருக்கு. நான் வரணும்-னா ஒரு Rs .100 செலவு ஆகவும். பரவா இல்லியா ?

(பஸ் stand -இல் இருந்து மிஞ்சி போனால், 100 metre தொலைவில் என் இல்லம்)

தெய்வம்  : கண்டிப்பா சார். போன் மட்டும் குடுத்துடுங்க ப்ளீஸ்.

நான் : நீ வந்துட்டு call பண்ணு தெய்வமே. நான் வர்ரேன்


மதிய நேரம்.

அதே எண்ணில் இருந்து அழைப்பு.

நான் :இதோ வந்துட்டேன் தெய்வமே. நீ பஸ் stand -லியே waitees பண்ணு"

போன் எடுத்துட்டு போனேன். தெய்வத்துக்கு என்னை அடையாளம் தெரியல. ரொம்ப பாவமா இருந்துச்சு. பக்கத்துலேயே 10 நிமிஷம் நின்னேன். தெய்வம் என்னை யாரோ மாதிரி பார்த்துச்சு.

நான் : "சார், உங்க போன்"

தெய்வம் கண் கலங்கி, "ரொம்ப thanks' - என்று கூறி  Rs.50-ஐ எடுத்து கொடுத்து  - "இவ்ளோ தான் சார் இருக்கு" என்றார்.

"விளையாட்டுக்கு சொன்னேன். வச்சிக்கோங்க"- என்று கூறி,

தெய்வம், "ஒரு 200 metre நடக்கிறதுக்கு சோம்பேறி தனம் பட்டு 350Kms சுத்துறன் சார் காலையில இருந்து." என்று மிகவும் பாவமாக கூறியது.

நான் : விடுங்க சார் பரவா இல்ல. இங்க நிக்காதீங்க. ஒரு சில bus தான் இங்க நிக்கும். அந்த இடத்துல தான் எல்லா bus-உம் நிக்கும். வாங்க, நான் drop பண்றேன்-னு சொல்லி வண்டியில் ஏற சொன்னேன்.

தலைக்கு மேல் கைகளை கூப்பியவாறு "வேண்டாம்"-என்று தலையை ஆட்டி செய்கை செய்து   பதில் ஏதும் கூறாமல் கண் கலங்கி  சென்றது தெய்வம்.