Monday, August 12, 2013

திருத்தி எழுதிய தீர்ப்புகள்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின்
"திருத்தி  எழுதிய தீர்ப்புகள்"  புத்தகத்தில்  இருந்து மிகவும் பிடித்த வரிகளை தொகுத்து உள்ளேன்  !

அந்தி 

ராத்திரி வரப்போகும்
ராச குமாரிக்கு
மேற்கு அம்மியிலே
மஞ்சள் அரைப்பது யார்?

பாரதி 

அவன் அதிசயம் செய்தான்!
தமிழின்  அத்தனை எழுத்தையும்
ஆயுத எழுத்தாய் அல்லவா மாற்றினான் ?
ஆதிக்க வேரறுக்கும்
ஆயுத எழுத்தாய் ...

மகாத்மா 

அப்படியொன்றும் உன்னை
அடியோடு மறக்கவில்லை
அண்ணலே !
இன்னும்
நகரத்துப் பெண்களிடம்
நல்ல செல்வாக்கு இருக்கிறது !

உன்னைப் பின்பற்றி
அரையாடை கட்டுவது
அவர்கள்தாம் இப்போது!


நட்சத்திரங்கள் 

நிலவு என்னும்
ஒற்றை வாக்கியத்தை
எழுதி முடித்த
எக்காளத்தில்....
எவனவன்
இத்தனை முற்றுப்புள்ளிகள்
இட்டு வைத்தவன் ?

"இந்த பூக்களைப்
பறிக்காதீர்கள்"
என்று
நிலாப்பலகையில்
எழுதி வைத்த
எச்சரிக்கை எழுத்துக்கள்
மேகச் சிராய்ப்பில்
அழிந்து போயினவோ?

அப்படி
அழித்து அழித்தும்
அழியாத அழுக்கே
அந்தக்
களங்கமோ?

மன்னிப்பு பரிகாரமல்ல

நீதான் கர்த்தனே
நீ தான் !

பாவிகளை ரட்சிப்பதாய்
பாவத்திற்கு நீ தானே
பரிந்துரை செய்தாய் ?


இயற்கையோடு இயைந்த வாழ்வு 

பிறை நிலா.

மகன் கேட்டான் :

"ஏம்ப்பா நிலா
சூம்பிப் போச்சு ?"

தகப்பன் சிரித்தான் :

"அதுக்கும் நம்மைபோல்
மாசக் கடைசியோ
என்னவோ மகனே !"

இயற்கையோடு இயைந்த வாழ்வு
என்பது இதுதானோ ?
எந்தமிழர் சொன்னதும்
சரிதானோ ?


கணக்குப் பார்கையில் 

இந்திய மண்ணில் ,

வியாபாரம் செய்ய வந்தவர்கள்
அரசியல் நடத்தினார்கள் !

அரசியல் நடத்த வந்தவர்கள்
வியாபாரம் செய்கிறார்கள் !


ராத்திரி விழிக்கட்டும் 


சித்தத்தினால் 
          கொண்ட 
பித்தத்தினால் 
           கனவு
முத்தத்தினால் 
          வந்த  
சத்தத்தினால் 

     தூக்கம் கலைந்ததடி தோழி  - செத்த    
     சூரியன் உதிப்பதெந்த நாழி?


ஏக்கம் வரும் 
         நெஞ்சில் 
வீக்கம் வரும்  
          பருவ 
நோக்கம் வரும் 
          எங்கு 
தூக்கம் வரும் ?

       கரைந்தது கன்னத்து மச்சம் - நான் 
       கன்னியாய்  இருப்பதே மிச்சம் !

பேர் கேட்டது 
       காதல் 
வேர்விட்டது 
        என்னை 
ஊர்சுட்டது 
        சாபம்
யார் இட்டது ?

       என்றுதான் ஜாதி உயிர் போகும் - இன்னும் 
       எத்தனை வருஷங்கள்  ஆகும் ?


பூவைப்பதா 
      பிறகு 
தீவைப்பதா 
      மனசு 
தேன் வைப்பதா 
     இல்லை 
சீழ் வைப்பதா ?

         ஒருமுறை தாய் வந்து பார்த்தாள்  - மழைக்கு 
          ஒழுகுதோ வீடென்று கேட்டாள் !


சாதிப்படி 
     பெற்ற 
பாதிப்படி 
     காதல் 
நீதிப்படி 
     துன்பம் 
எதுக்கடி ?

      விடிந்தால் தீர்ந்து விடும் வழக்கு - எங்கே   
        வெளுக்கிறதோ பார் அந்தக் கிழக்கு !