Tuesday, April 11, 2017

ஊட்டிக்கு தனியா தான் போகணும் போல இருக்கு !

மார்ச் மாதம் 9ஆம் தேதி, 2016. திங்கட்கிழமை காலை 9 மணிக்கு ஈரோட்டில் நண்பர் யோகானந்தனின் திருமணம். இது போல், வேண்டும் என்றே, வார நாளில் வெளியூரில் திருமணம் செய்வது எல்லாம் நாடி ,நரம்பு, இரத்தத்தில் எல்லாம் "கூட்டத்தை, செலவை  குறைப்பது எப்படி?" என்று யோசிப்பவராகளால் மட்டுமே இயலும். அந்த தந்திரம் எல்லாம் இவருக்கு பிறவியிலேயே இறைவன் அருளிய கொடை.

வெள்ளி மாலை, சென்னையில் இருக்கிறேன். பணிச்சுமை அதிகம். எப்படியும் திங்கள் ஈரோடு செல்ல வேண்டும். பயணம் செய்தும் நாள் ஆகிவிட்டது. உதகை செல்வோம் என்று திட்டம் இட்டேன். கோவைக்கு பேருந்தில் சென்று அங்கு இருந்து உதகைக்கு சென்றேன். எந்த முன் ஏற்பாடும் செய்யவில்லை. பார்த்துக்கொள்ளலாம் என்று கிளம்பி விட்டேன். சபரி மலைக்கு மாலை அணிந்து இருந்ததால் கூடுதல் தாடியுடன் குளிருக்கு இதமாய் இனிமையான பயணம். 

"தனியாகவா?" என்று கேட்போருக்கு எல்லாம்  ஒரே பதில் தான். என்னுடன் சுற்றிய உல்லாசப் பறவைகள் எல்லாம் கூண்டுக்காகங்கள் ஆகி விட்ட காரணத்தினால், மகான் மணிவண்ணன் "அமைதிப்படை" படத்தில் கூறியது போல் ஊட்டிக்கு தனியாக  தான் சென்றேன். 

உதகை பேருந்து நிலையத்தில் இறங்கியவுடன் ஒருவர் வந்தார். "அறைகள் இருக்கின்றன. வேண்டுமா?" என்றார். சரி என்றேன். 

ஒரு தங்கும் விடுதி காண்பித்தார். பிடித்து இருந்தது. சரி என்றதும் அந்த விடுதியின் வரவேற்பு அறையில் இருந்த ஒரு சின்ன பையனிடம் தனக்கான தரகு பணத்தை பெற்று வேகமாக சென்று விட்டார்.

2 நிமிடம் கழித்து, அந்த விடுதியின் மேலாளர் வந்தார். "நீங்களா தங்க போறீங்க?" என்று என்னை உற்று பார்த்து  கேட்டார்.  ஆம் என்றேன்.

அவர் என்னை கேட்ட கேள்வியை இதுவரை யாருமே கேட்டதில்லை. 

"நீங்க தற்கொலை பண்ணிக்க மாட்டீங்க இல்ல?" என்றார்.

தூக்கி வாரி போட்டது. இது புதுசா இருக்கே என்று எண்ணி "ஏன் கேட்கிறீர்கள்?" என்றேன்.

"இந்த மாதிரி தாடி வச்சிக்கிட்டு தனியா ஊட்டி வருபவர்கள்  எல்லாம் தற்கொலை பண்ணி செத்து இருக்காங்க. அதனால தான்" என்றார்.

என்னுடன் 10 நிமிடம் பேசினால் நீங்க தற்கொலை செய்து கொள்வீர்கள் என்ற உலக உண்மையை மனதுக்குள் நினைத்தேன். 

நன்கு யோசித்து பார்த்தேன். தரகு பணம் வேறு தந்து ஆயிற்று. அறைகளும் இந்த காலத்தில் நிரம்பாது. இவர் நம்மை அனுப்ப வாய்ப்பே இல்லை என்பதை தீர்மானித்தேன்.

கண்டிப்பாக  இவரை வெறுப்பேற்றி தான் இன்று பொழுதை போக்க இறைவன் நம்மை உதகைக்கு அனுப்பி இருக்கிறார். வந்த கடமையை முழுதாய் செய்து விடுவதாய் முடிவு செய்தேன் . 

"அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. நண்பர் திருமணம் ஈரோட்டில். ஆதலால் இங்கு வந்தேன்." என்று வேண்டும் என்றே இறுக்கமாய் முக பாவனையை மாற்றி சொன்னேன்.

"ஏன் இவ்ளோ தாடி வச்சி இருக்கீங்க ? எங்கே பணி புரிகிறீர்கள் ? " எல்லாம் கேட்ட பின்னும் மிகுந்த தயக்கத்தில் இருந்தார். "தற்கொலை எல்லாம் தப்புங்க. அப்படி எதுவும் பண்ணிடாதீங்க." என்றார். 

"அவ்வளவு பயம் இருந்தால் வேண்டாம். நான் வேறு விடுதிக்கு செல்கிறேன்"என்றேன். 

"வேண்டாம். தரகு பணம் வேறு தந்து ஆயிற்று. அறைகளும் இந்த காலத்தில் நிரம்பாது. தங்குங்க. நான் சொன்னதை மனசுல வச்சிக்கோங்க. 350 ரூபாய்க்கு ஆசைபட்டு சிறைக்கு போய் விடுவேன் போல் இருக்கிறது." என்று புலம்பிய படியே சாவி தந்தார்.

"ஓரே ஒரு வேண்டுகோள். நான் காண்பித்த அறை வேண்டாம். வரவேற்பு அறைக்கு அருகில் இருக்கும் அறையை எடுத்துக் கொள்ளுங்கள்" என்று கூறு கூறினார். பதில் பேசாமல் அறைக்குள் சென்றேன்.


குளித்து விட்டு வெளியே கிளம்பினேன்.  அடக்க முடியாத சிரிப்பு. ஆனால், வேண்டும் என்றே சோகமான பாடல் எல்லாம் பாடி, முகத்தை சோகமாகவே அவர் முன் காண்பித்தேன்.

"எங்கே போக போறீங்க?" என்றார்.

"தொட்டபெட்டா" என்றேன். உடனே, கைகளை வணங்குவது போல் வைத்து கொண்டு கண்களை மூடி வேண்டி "அங்க தான் தற்கொலை தளம் இருக்கு. போகாதீங்க " என்று கெஞ்சினார். 

அவரை லேசாக தோளில்  தட்டி, சரி என்பது போல் தலை ஆட்டி மனதுக்குள் சிரித்து கொண்டே வெளியே வந்தேன்.  

தொட்டபெட்டா நடந்து சென்று விட்டு , அனைத்து  இடங்களும் சுற்றி விட்டு, ஏரிக்கு சென்றேன்.

படகு சவாரி செய்ய சீட்டு வாங்கி விட்டு, படகில் ஏறச்சென்றேன். 

"ஒரே ஆளா?" என்றார். ஆம் என்றேன்.

"நீச்சல் தெரியுமா ?" என்றார்.

" தெரியாது. ஆனால், 2-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் "நீச்சல் அடிப்பது எப்படி?" என்ற கட்டுரையைமனப்பாடமாய் எழுதி முதல் மதிப்பெண்  பெற்றவன் நான் என்று கூறிய பெருமையை அவர் ஏற்று கொள்ளவில்லை. 

"இறங்குங்க" என்று பதமாக சொன்னார்.

நீச்சல் தெரியாவிடில்  உயிர் கவசம் தர சொல்லி கேட்டேன்.

"கொடுப்பேன். ஆனால், நடு ஏரியில் சென்று அதை கழட்டி போட்டுட்டு நீங்க விழுந்து தற்கொலை பண்ணிக்குவீங்க. அப்படி  தானே" என்றார். என்ன செய்வதென்றே தெரியவில்லை.

"நீங்க சீட்டை திரும்ப கொடுத்து விட்டு, பணத்தை திரும்ப பெற்று கொள்ளுங்கள்" என்றார்.

"சரி. தனி படகு வேண்டாம். 10 பேர் செல்லும் படகில் ஏற்றி விடுங்கள்" என்றேன்.

"அதுவும் தெரியுமே. நடு ஏரியில் சென்று நீங்கள் குதித்து தற்கொலை செய்வது மட்டும் அல்லாமல் பயத்தில் படகையும் சேர்த்து பிடித்து கவிழ்த்து விடுவீர்கள்" என்றார்.

"சத்திய சோதனை" என்று கூறி பணத்தை திரும்ப பெற்று, உண்டு விட்டு இரவு அறைக்கு சென்றேன்.

இதற்கு இடையில் நம் கதையின் கதாநாயகன்  மேலாளர், இரண்டு , மூன்று முறை அழைத்து "எங்க இருக்கீங்க ?" என்று அழைத்து நான் உயிருடன் இருப்பதை உறுதி செய்ததால் , அவரை வெறுப்பேற்ற முடிவு செய்து அலைபேசியை அணைத்து விட்டேன்.

மேலாளர், விடுதி வாசலில், பிரசவ அறையில் அலையும் கணவனை போல் அலைந்து கொண்டு இருந்தார்.  என்னை பார்த்ததும்  கண்ணுல தண்ணி வச்சுட்டார். எனக்கு சிரிப்பை அடக்க இயலவில்லை. "எங்கங்கே போனீங்க? ஏன் அலைபேசியை அணைத்து  விட்டீர்கள்?"  என்றார்.

பதில் கூறாமல் சிரித்து கொண்டே சென்றேன்.

பின்னாடியே நடந்து வந்தார். "ஒரே ஒரு உதவி" என்றார்.

"சொல்லுங்கள்"என்றேன்.

"கதவைத் திறந்து வச்சிட்டு தூங்குறீங்களா?" என்றார்.

"எதற்கு?" என்றேன்.

"திடீர்னு தொங்கிட்டீங்கன்னா நான் ஓடி வந்து காப்பாத்திடுவேன்" என்றார்.

சிரிப்பு வருகிறது. வெளிக்காட்டாமல்  வேகமாக உள்ளே சென்று கதவை மூடினேன். கதவைத் தட்டி உள்ளே வந்து  "சாளரம் மட்டுமாவது திறந்து வைக்க முடியுமா? என்றார். "முடியாது. எனக்கென்று தனியுரிமை வேண்டும்" என்று கூறி விட்டேன். 

நன்றாக நிழல் தெரிந்தது. என் அறை வாசலின் அருகிலியே நான் உறங்கும் வரை அமர்ந்து இருந்தார்.

காலை 4 மணிக்கு எல்லாம் விழிப்பு வந்து விட்டது. குளித்து விட்டு கிளம்பி விட்டேன். அவரும் மற்ற விடுதி ஊழியர்களும் நன்கு உறங்கிக்  கொண்டு இருந்தனர். 

5.30 மணிக்கு அலறி அடித்து என் அலைபேசிக்கு அழைத்தார். எடுத்தேன்.

"எங்க இருக்கீங்க?" என்றார். கோவை பேருந்தில் சென்று கொண்டு இருப்பதாய் சொன்னேன்.

"தற்கொலை செய்யாமல் உயிருடன் திரும்ப சென்றதற்கு நன்றி." என்று கூறி அழைப்பை துண்டித்து விட்டார்.

மற்றற்ற மகிழ்ச்சி!

Friday, April 7, 2017

தெய்வமும் குழந்தையும்

என் அக்கனின் இளைய மகன் - வைபவ் கார்த்திகேயன்.
(^ அண்ணன் = அண்ணா ; அக்கன் = அக்கா )

முதல் முறை, தொட்டிலில் இருந்து நான் தூக்கியது முதல் இன்று வரை, என் அக்கனிடம் கூட செல்லாமல் காலை முதல் இரவு வரை, கரம் பிடித்தோ, கட்டி அணைத்தபடியோ மட்டுமே இருப்பான்.

கிட்டத்தட்ட, ஓராண்டுக்கு முன், (4 வயது இருக்கும் அவனுக்கு அப்பொழுது).

இரவு நேரம். அவனைத் தட்டி உறங்க வைத்து விட்டு, சிலவற்றை யோசிக்கிறேன். தொழிலில் சின்னதாய் ஒரு சறுக்கல், தேக்க நிலை, சில இழப்புகள்.ஆழ்ந்த மனக்கேதம்.  திரும்பி இவனை பார்க்கிறேன். விழித்து இருக்கிறான். என்னை பார்த்த உடன், ஒரு கையை ஊன்றி, தூக்கக் கலக்கத்தில் எழுந்து என்னை உற்றுப்  பார்க்கிறான்.

வைபவ் :  மாமா, ஏன் ஷோகமா(ச = அவர் மொழியில்  ஷ) இருக்கீங்க ?

நான் : ஒன்னும் இல்லை டி! நீ தூங்கு.

வைபவ் : இல்ல, நீங்க ஷோகமா தான் இருக்கீங்க.

துக்கம்,  புன்னகைக்கு  இடம் தரவில்லை.

தன் கையை எடுத்து "கொஞ்சம் இருங்க" என்று கூறி

முகம் கழுவிய உடன் முகம் துடைப்பது போல், அவன் கையை எடுத்து மேலிருந்து கீழாக என் முகம் துடைத்தான்.

"இப்போ ஷோகம் போயிடுச்சா ?" என்றான்.

அவன் செய்கையைக் கண்டு லேசாக  ஓர வாயில் புன்னகைத்தேன்.

"ஹும். இங்க இன்னும் கொஞ்சம் ஷோகம் இருக்கு" என்று கூறி மறு கன்னத்தையும்  சற்று அழுத்தமாய் அழுத்தித் துடைத்தான்.

அவன் அன்பு, செய்கை, அதன் உன்னதம், அந்த அறியாமை எல்லாம் கண்டு முழுதாய் சிரித்தேன். "இப்போ பாருங்க ஃபுல்லா ஷோகம் போயிடுச்சு".  என்று சொன்னான். கட்டி அணைத்தேன். வழக்கம் போல் முத்தமிட்டான்.

வைரமுத்து அவர்களின் வரி தான் நினைவுக்கு வந்தது  - "அட பாசம் மட்டும் போதும் கண்ணே! காசு பணம் என்னத்துக்கு ?" என்ற எண்ணம். நிம்மதியாய் உறங்கினேன்.

"இறைவனை நேசியுங்கள். அவர் தம் கரங்களால் உங்கள் துயரங்களைத் துடைத்திடுவார்"  என்று ஒரு சுவற்றில் படித்த நினைவு.



அன்பிற்கினிய வைபி,

நாளை நீ வளர்ந்து, இந்தப் பதிவைப் படித்து, புரியும் தருவாயில், என் துயரை நீக்கியதற்கு, உன்னை காற்று உட்புகா வண்ணம்  நான் கட்டியணைத்து  நூறு முத்தங்கள் இடுவதாய்  நினைத்துக் கொள். காவிக்கண்டுகள் (chocolate) முதல் முத்தங்கள் வரை என் கருமித்தனத்தை நீ பொறுத்தருள்வாயாக!

Wednesday, April 5, 2017

போதையில் புத்தி மாறுமா?

சில நாள்களுக்கு முன் நடந்த சம்பவம்.

நண்பரின் தந்தை, அவர் வீட்டில் இருந்து  அருகில் இருக்கும் இன்னொரு நண்பரின் இல்ல நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டி இருந்தது.

இரு சக்கர வாகனத்தில் அவரால் அமர முடியாத காரணத்தால், மூன்று சக்கர வாகனம் ஒன்றை அழைக்க சென்றேன்.

மிக அருகில் செல்ல வேண்டும் என்ற காரணத்தால் யாருமே வர முன் வரவில்லை.

ஒரே ஒருவர், "நான் வர்றேன்" என்றார். அவர், மது அருந்தி இருந்தது நன்றாகவே தெரிந்தது. ஓரளவு நல்ல போதை. ஆனால், வேறு வழி இல்லை.  சற்று நிதானமாகவே ஓட்டினார்.

"எவ்வளவு?" என்று 2-3 முறை கேட்டேன்.

"நீ குடுக்கிறதை குடு" என்று சொல்லி என்னை பின் தொடர ஆரம்பித்தார்.

நண்பரின் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தி விட்டு, நண்பரின் தந்தையை அழைக்க சென்றேன்.

உடல் நலம் காரணமாக நண்பரின் தந்தை கிளம்பி வர சற்று தாமதம் ஆகும் என்று நான் யூகித்தேன். மூன்று சக்கர வாகன ஓட்டுனரிடம் "வர சற்று தாமதம் ஆகும். காத்திருப்புக்கு  தனியே பணம் தருகிறேன். தயவு செய்து காத்திருக்கவும்." என்றேன். சரி என்று தலை ஆட்டினார்.


நண்பரின் தந்தையை அழைக்க சென்றேன்.  15 நிமிடங்கள் ஆனது. அடிக்கடி வெளியே எட்டி பார்த்தேன்.  அவர் அங்கேயே காத்திருந்தார்.

நண்பரின் தந்தையை வண்டியில் ஏற்றி விட்டேன். அவர் பணப்பையை எடுத்து வர மறந்து விட்டார். அவர் கையில் - ₹20 தாள் 
ஒன்றும் , ₹50 தாள் ஒன்றும் தந்தேன்.

நண்பரின் தந்தை காதில் சொன்னேன்  - "முதலில் ₹50 தாங்க. பிரச்சினை பண்ணா, இந்த  ₹20 கொடுத்து விடுங்கள்." என்று சொன்னேன். அந்த வாகனம் கிளம்பியது.பொறுமையாக ஒட்டி செல்ல சென்றேன். சரி என்று தலை அசைத்து கிளம்பினார்.

எனக்கு அலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது. பேசிக்கொண்டு இருந்தேன். பின்பு, அந்த நிகழ்ச்சிக்கு சென்றேன். 

அந்த மூன்று சக்கர வாகனம் எதிரில் வந்தது. அந்த ஓட்டுநர் என்னை பார்த்து  "பத்திரமா விட்டுட்டேன் பா". என்றார். "நன்றி" என்று கூறி சென்று விட்டேன்.

நண்பரின் தந்தையிடம் சென்று "எந்த பிரச்சனையும் பண்ணாம காசு வாங்கிகிட்டு போயிட்டாரா ?" என்றேன்.

நண்பரின் தந்தை சொன்னார் - "நீ சொன்ன மாதிரி , முதலில் ₹50 தான் குடுத்தேன். அவன் திரும்பி பார்த்தான். எதுக்கு வம்புனு ₹20 தாளையும்  குடுத்தேன்." 

அந்த ஓட்டுநர் -  "போதையில வேற இருக்கேன். வயசானங்கவ-னு சொன்னார். அந்த கொறஞ்ச தூரத்துக்கு எவனும் ஸ்டாண்ட்ல வர மாட்டான். அதான் வந்தேன். ₹20 போதுங்க." என்று கூறி ₹50 தாளை திரும்ப தந்து விட்டு கிளம்பி விட்டாராம்.

இமான் அண்ணாச்சியின் நகைச்சுவை ஒன்று தான் நினைவுக்கு வருகிறது  - "குடிகாரன் எல்லாம் குழந்தை மாதிரி".

இந்த பதிவு, குடிப்பழக்கத்தையும் மது அருந்துபவர்களையும். எந்த வகையிலும் ஆதரிக்கவில்லை. எதிர் பாராத நபரிடம் இருந்து வந்த எதிர் பாராத நல்ல செய்கை. அதை பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே.